குருடனை பார்த்து கண்ணை முழி என்றால் எவ்வாறு முழிப்பது ? எமது உறுப்பினர்களின் இயலாமைக்கு என்ன காரணம் ?
பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் மட்டுமல்ல தமிழ் உறுப்பினர்கள் போன்று சமூகத்திற்காக வீரத்துடன் அச்சப்படாமல் பேசுகின்ற அல்லது போராட்ட குணமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தில் இல்லையா ? அவ்வாறானவர்களை ஏன் எங்களால் தெரிவுசெய்ய முடியவில்லை என்பதுதான் இன்று மக்கள் மனங்களிலும் எழுகின்ற கேள்வியாகும்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் யார் நிறுத்தப்படுகின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே பணத்துக்காக அல்லது வேறு காரணங்களுக்காக மக்களால் வாக்களிக்க முடியும். அவ்வாறல்லாமல் சமூக உணர்வாளன் என்ற காரணத்துக்காக தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு வாக்களிக்க முடியாது.
சமூகத்திற்காக வீரத்துடன் பேசமுடியாத கோழைகளுக்கும், அரசியல், இஸ்லாம் போன்றவற்றில் போதிய அறிவு, விவாதத்திறமை அற்றவர்களும், வரலாறுகள் தெரியாதவர்களும் ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள் ?
முஸ்லிம் தலைவர்கள் சில குறுகிய காரணங்களுக்காக மட்டுமே வேட்பாளர்களை தெரிவு செய்கின்றனர். இதில் மக்கள் நலனைவிட தலைவர்களின் சுயநலனே முதன்மையானது. வேட்பாளராக போட்டியிடுபவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்க வேண்டும். அவ்வாறு பணம் இருந்தால் மட்டுமே ஆடம்பரமாக செலவு செய்து மக்களை கவர்ந்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தலைவர்களின் நிலைப்பாடு.
அவ்வாறு பணம் உள்ளவர்களிடம் போதிய அரசியல் அறிவும், சமூக உணர்வும் உள்ளதா ? ஊழல்வாதிகளா ? திருடர்களா ? நேர்மையானவர்களா ? கடத்தல்காரர்களா ? துணிச்சலுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்கும் ஆற்றல் உள்ளவர்களா ? என்ரெல்லாம் சிந்திப்பதில்லை.
அறிவும், சமூகப்பற்றும், துணிச்சலும் உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு சென்றால், எதிர்காலங்களில் அது தலைமைத்துவத்துக்கு சவாலாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
அதிலும் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படும்போது தலைவரிடம் அடிக்கடி சென்று காலில் விழுந்து யார் அதிகமாக கெஞ்சுகின்றார்களோ அவ்வாறானவர்களும், மற்றும் ஊரில் உள்ள நூற்றுக் கணக்கானவர்களை கொழும்பில் உள்ள தலைவரின் இல்லத்துக்கு வாகனங்களில் அழைத்துச்சென்று யார் அழுத்தம் வழங்குகின்றார்களோ அவர்களும் வேட்பளராக நியமிக்கப்படுகின்றார்கள். இதுதான் கடந்தாகால வரலாறு.
எனவே தலைவர் சமூகத்துக்காக அன்றி தனது தேவைக்காக மட்டுமே வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துகின்றார். அவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்கின்றபோது சாணாக்கியன் போன்றும், கஜேந்திரகுமார் போன்றும், ஸ்ரீதரன் போன்றும் எவ்வாறு பேச முடியும் ? அல்லது செயற்பட முடியும் ?
சிலநேரம் பாராளுமன்றத்துக்கு மிக தகுதியானவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால், அவ்வாறானவர்கள் பணம் அல்லது உலர் உணவுப்பொதிகள் வழங்கவில்லையென்றால் மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் கசப்பான உண்மையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments