ஞானசார தேரர் கூறியிருப்பது அடிப்படைகளற்ற முட்டாள்தனமான கருத்து : சவால்களை முன்வைத்து விளாசுகிறது ஐக்கிய காங்கிரஸ்.
மாளிகைக்காடு நிருபர்
2009ம் ஆண்டு நாட்டின் வீரத்தளபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உறுதியான அரசியல் நிலைப்பாடு காரணமாக யுத்தம் முடிந்த பின், யுத்தத்தின் போது முஸ்லிம்கள் சிங்கள ராணுவத்துடன் நின்றதே தமிழீழ தோல்வி என்பதை புரிந்த வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பிரித்து மோதவிட்டால் தான் எதிர்காலத்தில் தம்மால் மீண்டும் விடுதலை போராட்டத்தை கொண்டு செல்ல முடியும் என்பதற்காக விலை கொடுத்து வாங்கப்பட்டவராகவே நாம் ஞானசார தேரரை சந்தேகிக்கிறோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது,
ஞானசார தேரர் என்பவர் வெளிநாட்டு தமிழ் டயஸ்போராக்களின் பின்னணியை கொண்டவர் போன்றே 2013ம் ஆண்டு முதல் பேசி வருகிறார். 2009ம் ஆண்டு எமது கட்சியும் பொதுபல சேனாவும் இணைந்து எல் ரி ரிக்கு கெதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தோம். இதுவே புலிகள் ஒழிக்கப்படு முன் அவர்களுக்கெதிராக நடந்த இறுதி ஆர்ப்பாட்டமாகும்.
இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு மூல கர்த்தா இறைவனும் குர்ஆனும் தான் என ஞானசார சொல்வது உண்மையாயின் உலகில் வாழும் குர்ஆனை படித்த கோடிக்கணக்கான முஸ்லிம்களில் எத்தனை ஆயிரம் பேர் முஸ்லிம் அல்லாத அப்பாவிகள் மீது தற்கொலை தாக்குதல் செய்துள்ளனர் என்பதை அவரால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என சவால் விடுகிறோம். இன்று வரை முஸ்லிம் அல்லாத நாடுகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் பல கொடுமைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்தும் அந்நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படாத காலத்தில் எத்தனை தாக்குதல்கள் அப்பாவிகளை இலக்கு வைத்து முஸ்லிம்களால் நடத்தப்பட்டன என்பதை நிரூபிக்க முடியுமா?
இந்தியாவில், இலங்கையில், தாய்லாந்தில், ஐரோப்பாவில், பர்மாவில் ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் கூட இந்நாடுகளில் முஸ்லிம்கள் அப்பாவிகள் மீது மனிதக்குண்டாக மாறியதில்லை. தம்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னும் இல்லை, முன்னும் இல்லை. குர்ஆன் இவ்வாறு மூளைச்சலவை செய்யுமாயின் முஸ்லிம்கள் தம் மீது தாக்குதல் இல்லாத காலத்திலும் மனித குண்டாக மாறியிருக்க வேண்டும். அவ்வாறு எங்கும் நடந்ததில்லை.பலஸ்தீனத்தை இஸ்ரவேலர் ஆக்கிரமித்த போதுதான் பலஸ்தீன முஸ்லிம்கள் முதன் முதலில் நவீன ஆயுதங்களை தூக்கினர். சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து லட்சக்கனக்கான முஸ்லிம்களை கொன்ற போது சோவியத் படைகளுக்கு எதிராக மனித குண்டுகள் வெடித்தன.
அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டை விதைத்து ஈராக்குக்குள் நுழைந்து அழிச்சாட்டியம் செய்த போது மனித குண்டுகள் அமெரிக்க படைகளுக்கெதிராக வெடித்தன. சதாம் ஹுசைன் காலத்தில் ஒரு மனிதக்குண்டும் ஈராக்கில் வெடிக்கவில்லை. இத்தனைக்கும் 98 வீதமான ஈராக்கிய முஸ்லிம்கள் குர்ஆனையும், அள்ளாஹ் ஒருவனையும் நம்புபவர்கள். அள்ளாஹ்வும் குர்ஆனும் மனிதனை வெடிகுண்டாக முஸ்லிம்களை மாற்றுமாயின் வரலாற்றில் வாழ்ந்த கோடிக்கணக்கான முஸ்லிம்களில் நூற்றுக்கு ஒரு வீதத்தையாவது மனித வெடி குண்டுகளாக மாற்றியிருக்காதா?அப்படி எதுவும் நடக்கவில்லை. சில விரல் விட்டு எண்ணும் முஸ்லிம்கள் மனிதக்குண்டுகளாக மாறியதற்கான காரணம் ரஷ்யாவும், அமெரிக்காவும், முஸ்லிம்களுக் கெதிரான தாக்குதலை அனுமதிக்கும் அரசுகளுமே தவிர குர்ஆனோ குர்ஆன் மூலமான ஓரிறைவன் அள்ளாஹ்வின் வார்த்தைகளுமல்ல என்பதை தேரர் உட்பட அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் குர்ஆன் காரணமல்ல. ரணில், சஜித் அரசின் பக்கபலமான ஆதரவுடன் திகன, கண்டி போன்ற அப்பாவி முஸ்லிம்கள் மீதான தாக்குதலாகும். இதற்குப் பின்னணியில் பொது பல சேனாவும் இருந்ததாக ஜனாதிபதி கமிஷன் குறிப்பிட்டதாக செய்திகளும் வந்தன. இத்தாக்குதலை தொடர்ந்து நாமும் வெடிகுண்டாய் மாறுவோம் என ஸஹ்ரான் பேசிய வீடியோக்கள் பகிரங்கமாக வெளிவந்தன. அப்படியாயின் ஸஹ்ரானை பயங்கரவாதியாக மாற்றி வெறி கொண்ட முட்டாளாக மாற்றியது நல்லாட்சி அரசின் பாதுகாப்புடன் நடந்த திகன, கண்டி, அம்பாரை பள்ளி தாக்குதலாகும் என்பதை நாம் புரியலாம். இதை திசை திருப்பவே ஞானசார தேரர் குர்ஆன் மீதும், அள்ளாஹ் மீதும் பழி போடுகிறார்.
திகன, கண்டி தாக்குதல்களால் விரக்தியுற்றிருந்த முஸ்லிம் இளைஞர்களை ஏதோ ஒரு வெளிநாடு மூளைச்சலவை செய்திருக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நமது நாடு இப்போது தேசிய பாதுகாப்பை உறுதி செய்து மிகச்சிறந்த பாதுகாப்பான நாடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் வீணான குழப்பத்தை ஏற்படுத்த ஞானசாரர் முயற்சிப்பதாகவே தெரிகிறது. இதனை கருத்திற்கொண்டு அவர் பகிரங்க ஊடகங்களில் குர்ஆன், அள்ளாஹ், இஸ்லாம் பற்றி பேசக்கூடாது என்ற தடை உத்தரவு பெற அரசு முயல வேண்டும் என அரசின் பங்காளி கட்சி என்ற வகையில் நாம் அரசை தயவாய் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
No comments