பாலஸ்தீன போராட்டம் பலயீனமடைந்துவிடாமல் அதனை வலிமைப்படுத்தும் இன்றைய சர்வதேச “குத்ஸ்” தினம்.
பாலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், போராளிகளுக்கு உட்சாகம் வழங்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையானது “சர்வதேச குத்ஸ்” தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்கள் 1979 இல் இத்தினத்தை பிரகடனம் செய்திருந்தார். இது அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
உலக இஸ்லாமியர்களினால் புனித யாத்திரை செல்லக்கூடிய மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று வணக்கஸ்தளங்கள் அமைந்துள்ள நகரங்களான முறையே மக்கா, மதினா, ஜெருசலம் ஆகியன உலக இஸ்லாமியர்களின் புனித நகரங்களாகும்.
இதில் மக்கா, மதினா ஆகியன சவூதி அரேபியாவிலும், ஜெருசலம் நகர் பாலஸ்தீனிலும் அமைந்துள்ளது. “மஸ்ஜிதுல் அக்ஸாவையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் அருள்பாலிக்கப்பட்ட பூமியாக ஆக்கினோம்” என்று அல்-குர்ஆனில் கூறப்படுகின்றது.
சுலைமான் நபி அவர்களினால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸாவானது இஸ்லாமியர்களின் முதலாவது கிப்லாவாகும். இதனை நோக்கியே ரசூலுல்லாஹ்வும், தோழர்களும் சுமார் பதினேழு மாதங்கள் தொழுததுடன், அங்கிருந்துதான் புனித மிஹ்ராஜ் பயணமும் மேற்கொள்ளப்பட்டது.
பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிப்பதற்காக பல நூறு வருடங்களுக்கு முன்பே யூதர்கள் திட்டமிட்டதுடன், இதற்காக 1897 இல் “சியோனிஸ்ட்” என்னும் அமைப்பை ஆரம்பித்திருந்தனர்.
அதாவது யூதர்கள் இல்லாத நிலையில், பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்னும் நாட்டை உருவாக்குவதென்றால் அங்கு யூதர்களை குடியேற்ற வேண்டும். இதற்கு அன்றைய சக்திமிக்க இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருந்த ஓட்டோமான் பேரரசு இருக்கும் வரைக்கும் இது சாத்தியமற்றது.
முதலில் இதற்கு தடையாக உள்ள ஓட்டோமான் இஸ்லாமிய பேரரசை வீழ்த்தும் முயற்சியில் சியோனிஸ்டுக்கள் தீவிரமாக செயல்பட்டதுடன், இதற்காக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் முழுமையான உதவிகளை பெற்றனர். இது முதலாவது உலகமகா யுத்த காலத்தில் யூதர்களின் இந்த திட்டம் வெற்றியடைந்தது.
அதாவது ஓட்டோமான் பேரரசு உடைந்து இஸ்லாமியர்களின் ஒற்றுமை சிதைவடைந்ததுடன், இஸ்லாமியர்கள் என்ற வரையறையை தாண்டி இன, மொழி மற்றும் மார்க்க கொள்கைகளை முன்னிறுத்தி பல நாடுகள் உருவானது. இதில் சில நாடுகள் மேற்குலகின் அடிமைகளாக உள்ளன.
எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமைப்பட்டுவிட கூடாது என்பதில் சியோனிஸ்டுக்கள் இன்று வரைக்கும் மிகவும் கவனமாகவும், விழிப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இஸ்லாமிய பேரரசின் வீழ்ச்சியின் பின்பு பாலஸ்தீனை நோக்கி உலகின் பலபாகங்களிலுமிருந்து யூதர்கள் குடியேற்றப்பட்டனர். அந்தவகையில் 1920 தொடக்கம் 1931 வரையான காலப்பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் வரையிலான யூதர்கள் பாலஸ்தீனில் குடியேற்றபப்பட்டார்கள்.
அதேநேரம் ஜேர்மனியில் ஹிட்லர் யூதர்களை வேட்டையாடினார். பல இலட்சம் யூதர்கள் நாசிப்படைகளினால் கொலை செய்யப்பட்டார்கள். ஹிட்லரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வேறு பல நாடுகள் யூதர்களுக்கு அடைக்களம் வழங்க முன்வந்தன.
ஆனால் அகதிகள் என்ற போர்வையில் அவர்கள் பாலஸ்தீனை நோக்கியே குடியேறினர். இதனால் இன்னும் பல இலட்சம் யூதர்கள் பாலஸ்தீனில் குடியமர்த்தப்பட்டனர்.
பின்பு பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியுடன் 1948 இல் இஸ்ரேல் என்னும் யூத நாடு பிரகடனப்படுத்தப்பட்டது.
சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட யூத நாட்டை பாதுகாப்பதற்காக இன்று வரைக்கும் பல இலட்சம் பாலஸ்தீன இஸ்லாமியர்களை கொலை செய்து அவர்களது சொந்த நாட்டைவிட்டும் விரட்டி உள்ளனர்.
அத்துடன் சிறுவர்கள் உற்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் யூதர்களின் சிறைக்கூடங்களில் வாடுகின்றனர்.
இஸ்ரேல் என்னும் நாடு பிரகடனப் படுத்தப்பட்டதிலிருந்து பல யுத்தங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் உள்ள ஒற்றுமையின்மை காரணமாகவும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருப்பதனாலும், பணத்துக்காக யூதர்களுக்கெதிரான புனித போராட்டம் துரோகிகளினால் காட்டிக்கொடுக்கப்பட்டதனாலும் பாலஸ்தீன போராளிகளின் தியாகத்திற்கான இலக்கை அடைய முடியவில்லை.
ஆனாலும் எத்தனை இழப்புக்களையும், துயரங்களையும் எதிர்கொண்டிருந்தும் பாலஸ்தீன மக்கள் தங்களது புனித பிரதேசத்தை மீட்பதற்கான போராட்டத்தில் மனம் தளராது தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களது புனித போராட்டத்திற்கு உற்சாகம் வழங்கும் இன்றைய குத்ஸ் தினத்தில் பாலஸ்தீன போராட்டத்தின் வெற்றிக்காக பிரார்த்திப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments