பாடத்திட்டங்களை வகுத்து அரபு மத்ரசாக்களை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் : உலமா கட்சி
நூருல் ஹுதா உமர்
அரபு மத்ரசாக்களை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால கோரிக்கையாக இருந்தாலும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் அரபு மதுரசாக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
மதரசா என்ற சொல்லின் பொருள் பாடசாலை என்பதாகும். நமது நாட்டில் உள்ள குர்ஆன் பாலர் பாடசாலை, அரபு கல்லூரிகள் என்பனவும் மதுரசா என்ற பெயரில் அழைக்கப்படுவது அறிவீனமாகும். மதரசாக்களை சரியாக பிரித்து அவைகளுக்கு பெயர்கள் இடப்பட வேண்டும். குழந்தைகளுக்கு புனித குர்ஆனை வாசிப்பது எப்படி என கற்றுக்கொடுக்கும் பாடசாலைகளுக்கு "குர்ஆன் பாலர் பாடசாலை" அல்லது குர்ஆன் மதரசா என அழைக்கலாம்.
அதற்குப்பின் நாம் பார்த்தால் நமது நாட்டில் உள்ள பெரும்பாலான மதுரசாக்கள் அரச பாடசாலைகளில் ஆண்டு 8 வரை படித்த மாணவர்களையே உள் வாங்குகின்றன. சில மதரசாக்கள் மற்றும் நளீமிய்யா என்பன க. பொ.த. சா.தரம் படித்தவர்களை உள்வாங்குகின்றன. இப்படிப்பட்ட அரபு கல்லூரிகளை இரண்டாக வகைப்படுத்த வேண்டும். இவற்றில் சேர்க்கப்படும் மாணவர்கள் அரச பாடசாலைகளில் ஆண்டு 9 வரை கற்று 10ம் ஆண்டுக்குள் சென்ற 14 வயது பூர்த்தியானவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இங்கு அரபு மொழியுடன், ஆங்கிலம், சிங்கள, தமிழ், உருது மொழிகளுடன் க.பொ.த பாடங்கள் சிலவும் கற்றுக்கொடுக்கப்படும். இதற்கான ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமிக்க வேண்டும். க. பொ.த பாடத்திட்டம் அரச கல்வி பாடத்திட்டத்தின் படியே கற்றுக்கொடுக்கப்படும். அரபு மொழி பாடத்திட்டம் மூன்று வருடங்களுக்கு கற்பிக்கப்படும். இதற்கான பாடத்திட்டமும் கல்வி அமைச்சால் ஏற்படுத்தப்பட்டு இவற்றுக்கான ஆசிரியர்களும் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டு அரச சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இம்மதரசாக்களில் நியமிக்கப்பட்டும் ஆசிரியர்களின் நியமனம், இட மாற்றம் என்பனவற்றையும் கல்வி அமைச்சே கவனிக்க வேண்டும். இதனை கல்வி அமைச்சில் ஏற்படுத்தப்படும் அரபு மதரசா பிரிவு கண்காணிக்கும். இவ்வாறு மூண்று அல்லது நான்கு வருடங்கள் இங்கு கல்வி பெறும் மாணவர்கள் க. பொ. த. உயர்கல்வியுடன் மதரசா கல்வியையும் நிறைவு செய்து அவர்களுக்கு உயர் கல்வி பத்திரம் எனும் பொருளிலான "ஷஹாதா தானவிய்யா" வழங்கப்படும். மௌலவி பத்திரம் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு உயர் கல்வி முடித்த மாணவர்களுக்கு அதன் பின் நான்கு ஆண்டு கல்வி அதே மதரசாவில் அல்லது அதற்கென்ற தனியான அரபுக்கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட வேண்டும். இது பல்கலைக்கழக தரம் கொண்ட கல்வியாக அமையும். இதில் சித்தியடையும் மாணவர்களுக்கு ஷஹாதா ஜாமியிய்யா என்ற பத்திரம் வழங்கப்படும். இப்போது அந்த மாணவன் சுமார் 21 அல்லது 22 வயதை அடைந்திருப்பார். எனினும் மௌலவி பத்திரம் வழங்கப்பட மாட்டாது. அதன் பின் இவ்வாறு ஷஹாதா ஜாமியிய்யா பட்டம் பெற்ற மாணவர்கள் 30 வயதை அடைந்த பின் தேசிய ரீதியிலான பொதுப்பரீட்சை ஒன்றை எழுத வேண்டும். அதனை கல்வி அமைச்சும் முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்தும்.
இப்பரீட்சையில் சித்தியடைவோருக்கு அரசாங்கத்தால் "மௌலவி" தராதர பத்திரம் வழங்கப்படும். இதன் மூலம் யார் யார் மௌலவிமார் என்ற தரவு கல்வி அமைச்சிடமும் அரசிடமும் இருக்கும். இந்த மௌலவிமாரே அரச பாடசாலைகளில் சமய ஆசிரியர்களாகவும், அரபுக்கல்லூரி ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் நியமிக்கப்படுவர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் அரசால் வழங்கப்பட வேண்டும்.
அரபுக்கல்லூரிகளை ஒரு சட்ட வரைவிற்குள் கொண்டு வர உலமா கட்சி இந்த ஆலோசனைகளை முன் வைக்கிறது. மற்றபடி ஈஸ்டர் தாக்குதலுக்கும் மதுரசா கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே எமது கருத்து. இது உண்மையான காரணத்தை அறிய விடாமல் திசை திருப்பும் முயற்சியாகும். இத்தாக்குதலில் ஈடுபட்ட பலர் மதரசாவில் படிக்காமல், உயர் கல்வி நிலையங்களில் கற்றவர்கள். அவர்களை சாதாரண மதரசாவில் கற்ற ஒரு மௌலவியால் மூளைச்சலவை செய்ய முடியாது. அவ்வாறு முடியும் என்றால் உலகில் பல கோடிப்பேர் பேசும் மொழி அரபு மொழியாக இருப்பதால் அம்மொழியை பேசுவோரால் உலகமே மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும். ஆனால் அரபுக்கள் என்பது அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏகாதிபத்திய நாடுகளால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பதே உண்மை.
எம்மைப்பொறுத்த வரை இளைஞர்களை உணர்வூட்டும் புற காரணிகள் இன்றி இத்தகைய தாக்குதலுக்கு அவர்களை சேர்க்க முடியாது. அத்தகைய புறக்காரணிகள் என்பது முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள், அத்துமீறல்கள், தமிழீழ விடுதலை பயங்கரவாதிகளின் கொடுமைகள், பொதுபல சேனா போன்ற அமைப்புக்களின் வெறுப்பூட்டும் இனவாத உரைகள், அத்துமீறல்கள், அளுத்கம, அம்பாரை, திகன, கண்டி என அரசு பார்த்திருக்க நடைபெற்ற தாக்குதல்கள் போன்ற புறக்காரணிகளே பிரதான காரணிகளாகும். இத்தகைய ஆத்திரமூட்டும் காரணங்களை ஆராய்ந்து அவற்றை ஒழிக்க முற்படுவதை விடுத்து அரபு மதுரசாக்களையும் பெண்களின் ஆடைகளையும் தூக்கிப்பிடிப்பது புற்று நோய்க்கு பெனடோலைப்போடுவதன் மூலம் தீர்க்கலாம் என்ற முட்டாள்தனமாகும் என்று தெரிவித்துள்ளார்.
No comments