சம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம் !
நூருல் ஹுதா உமர்
குவிந்து கிடக்கும் குமுறல்களுக்கு நடுவில் தினம் ஒரு பெண்ணின் ஓலத்தோடு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகிறது. எதிர்ப்பட்ட இரு உதடுகள் சம்பிரதாயமாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் ஒரு சடங்காகவே மாறிவருகிறது என இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றியம் விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில்
ஊர் கூடி தேர் இழுப்பதைப் போலவே இந்த மாதம் முழுமையும் முன்னேற்றப்பாதையில் தங்களை அம்புகளைப் போல செலுத்திக் கொண்டு இருக்கும் பெண்களின் முதுகின் கனம் இன்னமும் கூடிப்போய் இருக்கிறது இந்த நூற்றாண்டில்.பெண் குழந்தையா ? சித்ரவதைகள் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டாள் அவள் தன் மென் பிஞ்சு அதரங்களின் நடுவில் நெல்லை சுவைத்து அதை தொண்டைக் குழிக்கும் அமிழத்திக் கொள்ளும் நீலகண்டனின் விஷம் போல.
ஏன் ஆணின் முதுகெலும்பில் பிறந்தவள் பெண் என்று ஒரு வார்த்தை உண்டு. முதுகெலும்பினால் பிறப்பெடுத்ததால் என்னவோ அவள் தன் முதுகிலும் அநேக பாரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. நிழல்களாய் உண்மையைத் தொடர முயற்சிக்கிறாள் ஆனால் கிடைப்பதென்னவோ நிழல் தொலைத்த நிஜங்கள்தான். ஓவியத்தின் நிறங்கள் சுரண்டப்பட்ட நிறங்கள் தான் அவளின் வாழ்வின் தடங்களைச் சொல்லுகிறது.
கண்ணாடிக்குள் அடைக்கப்பட்ட பாதரஸமாய் பிறரை வாழவைத்து தன்னையே மறைத்துக் கொள்ளும் பெண்ணிணமே இன்னும் இன்னும் வீறு கொண்டு நீ எழவேண்டும்... வெறும் உடல்களால் மட்டும் வரிக்கப்படும் உன் பெண்மையை ருசிக்கக் காத்திருக்கும் கழுகுகளைக் கொத்தும் பருந்தினைப் போல நீ மாற வேண்டும். மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும். காத்திருக்கிறோம் உலக மகளிரே கைகோர்த்துக் கொள்ளுங்கள். இந்த வருட மகளிர் தினமாவது விடியட்டும். சூரியனை நோக்கி அந்த நெருப்புக் கங்குகளாய் நாம் இருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments