வை.எம்.ஹனிபாவின் மறைவு சாய்ந்தமருதுக்கு பேரிழப்பாகும்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் தெரிவிப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
எமது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் மறைவு இப்பிரதேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் தெரிவித்துள்ளார்.
அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
ஒரு நல்லாசானாகவும் அதிபராகவும் கல்விப் பணியாற்றி சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்த அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்கள், எமது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று, பள்ளிவாசல் நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்தி வந்திருக்கிறார்.
எமது ஊரின் நீண்ட கால அபிலாஷையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்றத்தை அடைந்து கொள்வதற்காக ஊர் மக்கள் அனைவரையும் பள்ளிவாசல் எனும் ஒரே கொடியின் கீழ் அணிதிரட்டி ஒற்றுமைப்படுத்துவதில் அவர் வெற்றி கண்டிருந்தார்.
இந்நிலையில், அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் மறைவு எமது மண்ணுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
அவர்களது சேவைகளை பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திப்பதுடன் அவர்களது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்- என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
No comments