வெறுப்பூட்டும் பேச்சுகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவர வேண்டும், ஊடகவியலாளர்கள் இவ்விடயங்களை வெளிக் கொண்டுவர வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
வெறுப்பூட்டும் பேச்சுக்களை யார் பேசினாலும் அவர்களுக்கு எதிராக பொலிஸில் முறையிட்டு மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து தண்டிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதனை தண்டனை சட்டக் கோவையின் கீழ் கொண்டு வந்து சாதாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வழியமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை முன்வைத்தார்.
மினுவாங்கொடையில், நேற்றுமுன்தினம் (20) நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த மேடையில் நீதியமைச்சர் அலி சப்ரி இருப்பதனால் இந்த விடயத்தினை சொல்லி வைக்க விரும்புகின்றேன். 2019ஆம் ஆண்டில் மினுவாங்கொடைப் பிரதேசம் பெரிய கலவரத்திற்குள்ளானது. அது குருநாகல் தொட்டு மினுவாங்கொடை வரை பரவியது. இவ் ஊர் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை.
ஓர் இனக்கலவரம் நடைபெறும் போது இனக் கலவரத்திற்கு காரணமாக இருக்கின்ற அல்லது வெறுப்பூட்டல் பேச்சுக்களை பேசுகின்ற யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராகச் எடுக்கப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளுக்கு என்ன நடக்கின்றது? இது குறித்து நாம் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
இவ்வாறான குற்றத்திற்காக எமது நாட்டில் ஒரே ஒரு சட்டம் ஏற்பாடு உள்ளது. அதாவது ஐ.சி.சி.பி 3ஆவது சரத்தில் 3-1 வெறுப்புப் பேச்சு என்கின்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சட்டம் 2ஆவது உலக மகா யுத்த காலத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்.
கலவரம் நடைபெறுகின்றபோது தூண்டி விடுகின்றவர்களுக்கு அதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வேண்டும் என அரசு சொல்லுகின்றது.
ஆனால் 2014 இல் அளுத்கம, பேருவளை கலவரம் 2016, 2017 கிந்தோட்ட, அதன் பிறகு திகன கண்டி, உயிர்த்த ஞயிறு தாக்குதலின் பிற்பாடு மினுவான்கொடை, குருநாகல் என இனக்கலவரங்களின்போது நாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டோம். இக் காலத்தில் சில வழக்குத் தாக்கல்கள் செய்திருந்தோம். இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
அதே நேரம் இவ் விடயம் நீதியமைச்சினால் கவனிக்கப்படல் வேண்டும். ஆனால் வேறு விடயங்களுக்காக இச் சட்டம் பாவிக்கப்படுகின்றது. சாதாரணமாக அப்பாவி ஊடகவியாலாளர் அல்லது சிறுகதை எழுத்தாளன் ஏதாவது சமூக ஊடகங்களில் எழுதினால் தண்டிக்கப்படுவார்கள்.
அத்துடன் ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் முக்கியமாக இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு இருத்தல் வேண்டும். நாம் வெறுப்பூட்டல் அல்லது இனக் கலவரம் சம்பந்தமாக பொலிஸில் முறையிட்டாலும் அதற்காக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளது.
ஆகவேதான் இவ்வாறான விடயங்கள் சாதாரணமாக பொலிஸில் முறையிட்டு குற்றப்பத்திரிகை ஊடாக மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். வன்முறையாளர்கள் தண்டிக்கப்படல் வேண்டும் .
இதனை தண்டனை சட்டக் கோவையின் கீழ் கொண்டு வந்து சாதாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வழியமைக்க வேண்டும். ஆகவே தான் இலங்கையின் சில உள் விவகாரங்கள் ஜெனிவாவில் கூட பேசப்படுகின்றது.
மினுவாங்கொடை பாதிக்கப்பட்ட தொரு பிரதேசம். அப்பிரதேசத்தில் வாழ்கின்றதொரு மூத்த ஊடகவியலாளர் நிலாமின் வைபவத்தில் இங்கு உள்ள ஊடகவியலாளர்கள் இவ்விடயங்களை பூதக்கண்ணாடி போன்று பார்த்து இதனைக் வெளிக் கொண்டுவர வேண்டும் என்றார்.
(அஷ்ரப் ஏ சமத்)
No comments