பொறுப்புக்கள் என்பது அமானிதமாக பார்க்கப்பட வேண்டும் மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.லத்தீப் தெரிவிப்பு!
(சர்ஜுன் லாபீர்)
அரச உத்தியோகத்தர்களின் சேவைகள் என்பது பொது மக்களின் மனங்களை வெல்வதாக அமைய வேண்டும்.அவ்வாறு அமைகின்ற போதுதான் மக்களின்
மனங்களில் நீங்கா இடம் பிடிக்கலாம்.என்று அம்பாறை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.எம்.லத்தீப் தெரிவித்தார்.
இன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் புதிய கணக்காளராக பதவியேற்ற கே.ரிஸ்வி யஹ்சரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
பதவிகள் என்பது கிரீடங்களாக பார்க்கப்பட வேண்டுமென்றும் அதற்கு ஏற்றால் போல் மக்களின் மனங்களை சேவைகளின் ஊடாக நீங்கா இடம்பிடிக்க வேண்டும் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையில் அரச சேவையை செவ்வனே நிறைவேற்றினோம் என்கின்ற மன நிலையும்,மன திருப்தியும் உருவாகும் என குறிப்பிட்டார்.
மேலும் ஓர் அரச அதிகாரி சேவையின் பின்னர் ஓய்வு நிலை அடைகின்ற போது அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் மாத்திரம் தான் இறுதியாக எஞ்சியுள்ளதாக இருக்கும் என்று பேசும் அளவுக்கு நாம் ஆளாக கூடாது. மாறாக மக்களின் மனங்களில் ஆசனமிட்டு அமர்ந்து இருக்கின்றோம் என்கின்ற உணர்வுகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.அதுவே எமக்கு அரச சேவையில் கிடைக்கின்ற அடையாளமாகவும்,கெளரவமாகவும் காணப்படுகின்றது.
அரச சேவை என்பது ஒரு பொறுப்பு அப் பொறுப்பினை நாம் சரியாக செய்கின்ற போது இன, மத ,பிரதேச வேறுபாடு இன்றி எல்லா மக்களும் எங்களை விரும்புவார்கள் அதுவே இவ்வுலக வாழ்க்கையின் பின்னரான மறுமை வாழ்க்கை என்ற ஒன்று இருக்கு என்று நம்புகின்ற ஒவ்வொரு நபருக்கும் அருளாகவும்,பெறுபேறாகவும் எதிர்காலத்தில் மாறப்போகின்றது.
எனவே மக்களோடு மக்களாக இருந்து நல்ல பணிகளை அரச உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் செய்வதற்கு தங்களுடைய பதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,உதவி பிரதேச செயலாளர் என்.நவனிதராஜா கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா,கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹீர்,பொலிஸ் திணைக்கள அம்பாறை.மாவட்ட கணக்காளர் ஏ.எம் அப்துல் அமீன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதாகரன்,நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம்,மேலதிக மாவட்ட பதிவாளர் ரி.நித்தியானந்தன்,கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் மனோஜ் இந்தரஜித் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments