Breaking News

கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்தியை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில், விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வந்த உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் அடுத்த சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மத்திய பொறியியல் நிபுணத்துவப் பணியகத்தின் (சி.ஈ.சி.பி.) உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று திங்கட்கிழமை (01) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் இம்மைதானத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு, நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

இதில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.நிசார், ஏ.சி.ஏ.சத்தார், ஆணையாளர் எம்.சி.அன்சார், பொறியியலாளர் ஏ.எச்.ஏ.ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வீ.உதயகுமரன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ், அவர்கள், கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, மேற்படி திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததுடன் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் அடிக்கல் நடப்பட்டு, முதலாம் கட்ட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments

note