Breaking News

சட்டத்துறையால் சம்பாதிப்பதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புக் காட்டியவர் தாஹா செய்னுதீன்;

சட்டத்துறையால் சம்பாதிப்பதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புக் காட்டியவர் தாஹா செய்னுதீன்;

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவிப்பு



சட்டத்துறையில் மிகவும் மதிநுட்பம் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் அவர்களின் மறைவு சமூகத்திற்கும் எமது பிராந்தியத்திற்கும் பேரிழப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தாஹா செய்னுதீன் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் அவர்களின் திறமைகள், சேவைகள் பற்றி எமது மறைந்த பெரும்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் சிலாகித்துப் பேசுமளவுக்கு சட்டத்துறையில் அவர் ஆழ்ந்த அறிவையும் தெளிவையும் கொண்டிருந்தார்.

இவர் அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் முழுக்கிழக்கு மாகாணத்திலும் ஒரு முன்னணி சட்டவல்லுனராக சேவையாற்றியுள்ளார்.

தனது சட்டத்தொழிலில் மிகவும் நேர்மையைக் கொண்டிருந்த அவர் மனிதாபிமானமிக்க ஒரு சட்டத்தரணியாகவே செயற்பட்டிருந்தார்.

சட்டத்துறையில் அரை தசாப்த காலத்திற்கு மேலாக ஒய்வின்றிப் பணியாற்றியுள்ள சட்டத்தரணி தாஹா செய்னுதீன் அவர்கள் இத்தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலேயே கரிசனை செலுத்தி வந்துள்ளார். இறைவன் தனக்கு அருளியிருந்த சட்ட அறிவாற்றலை அவர் ஏழை, எளிய மக்களுக்கு சேவையாக வழங்கி வந்தமை சுட்டிக்காட்டத்தக்க சிறப்பம்சமாகும்.

அன்னாரது சட்டத்தொழில்வான்மையானது ஏனைய சட்டத்தரணிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது.

வல்ல இறைவன் அவரது சேவைகளை பொருந்திக்கொண்டு, அன்னாரது பாவங்களை மன்னித்து உயரிய சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)



No comments

note