Breaking News

காரைதீவு சிரேஷ்ட ஊடகவியலாளரினால் பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் : அவரை பகிரங்கப்படுத்தி சட்டநடவடிக்கை எடுக்க சபையில் கோரிக்கை !

நூருல் ஹுதா உமர். 

என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு வீணான பழிகளை சுமத்தி என்னுடைய கௌரவத்தை கேள்விக்குட்படுத்த காரைதீவில் சிலர் முனைந்துள்ளார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் என்னுடைய சுய கௌரவத்தை நான் இழக்க விரும்பவில்லை. அதனாலயே என்னுடைய இராஜினாமா கடித்தை கையளித்துள்ளேன். எனக்கு நல்ல வருமானமும், கௌரவமான தொழிலும் இருக்கிறது. நான் யாருக்கும் கூஜா தூக்க தேவையில்லை. என்னை இலக்கு வைத்து வீணான வார்த்த பிரயோகங்களை சிலர் பாவித்து வருகிறார்கள். என்னை எனது ஊரில் வாழாமல் வெளியேறி மாளிகைக்காட்டுக்கு செல்லுமாறு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் விரட்டுகிறார். இந்த பிரதேச சபை பதவியை கொண்டு என்னுடைய குடும்பத்திற்கு எந்த பலனையும் நான் பெற்றுக் கொடுக்கவில்லை. மக்களுக்கே சேவையாடியுள்ளேன் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமார ஸ்ரீ தெரிவித்தார். 

நேற்று காலை காரைதீவு பிரதேச சபையில் ஒத்திவைப்பு சபை கூட்டம் மீள கூடியபோது அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், 

என்னுடைய நண்பர்கள், ஆதரவாளர்கள், குடும்பத்தினர் என பலரதும் வேண்டுகோளின் படியே நான் இராஜினாமா செய்துள்ளேன். இது என்னுடைய கடைசி உரையாகவும் அமையலாம். அது தொடர்பில் நான் கவலையடைய வில்லை. நீதியாக, நேர்மையாக தர்மத்தை நிலைநாட்ட எனது பதவியை உபயோகப்படுத்தி யுள்ளேன். மிருகங்களின் மத்தியில் அரசியல் செய்ய விரும்பாததனாலையே இந்த  முடிவை எடுத்துள்ளேன். இனி கள அரசியலில் ஈடுபட போவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும் இன்றுபோலவே அன்றும் தர்மத்தின் பக்கம் நிற்பேன். என்னுடன் சேர்ந்து பயணித்த தவிசாளர், பிரதி தவிசாளர், சக உறுப்பினர்கள், சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பக்கபலமாக இருந்த ஊடக நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள் என்றார். 

இங்கு உரையாற்றிய பிரதிதவிசாளர் ஏ.எம். ஜாஹீர், தைரியமாகவும், சிறப்பாகவும் இயங்கிய கௌரவ உறுப்பினரை விரட்டிய சிரேஷ்ட ஊடகவியலாளர் யார் என தெரியப்படுத்த வேண்டும். எமது பிரதேச சபை குடும்பத்தின் உறுப்பினரை விரட்டிய அவருக்கு எதிராக சபையினரால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் விடுத்தவர்கள் ஒரு குழுவா அல்லது  தனிநபரா என ஆராய்ந்து பொலிஸில்முறையிட வேண்டும். அவருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஏதாவது நடந்தால் அவர்களே வகை சொல்ல வேண்டும் என்றார். தொடர்ந்து உரையாற்றிய உறுப்பினர் முஸ்தபா ஜலீல், தைரியமாக உண்மைகளை பேசுபவர் சகோதரர் குமாரஸ்ரீ. அவரை கடுமையாக அழுத்தி பிரதிதவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரிய பிரேரணையை கொண்டுவர நிர்ப்பந்தித்துள்ளார்கள். அவரது நிலையை பார்க்கும் போது கவலையாக உள்ளது என்றார். 

குமாரசிறியின் பிரதேச சபை நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசிய உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் எங்களின் அல்லக்கைகள், ஆதரவாளர்கள் முகப்புத்தகத்தில் எழுதுவதை எல்லாம் நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்றார். தொடர்ந்தும் எனக்கு பக்கத்தில் இருக்கும் நீதி தவறாத நடுநிலை போக்கு கொண்ட குமாரசிறி அவர்கள் தொடரந்து இந்த சபையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் இனிவரும் காலங்களிலும் மக்கள் பிரதிநிதியாக இங்கு தொடர வேண்டும் என எம்.என்.எம். றனீஸும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தொடர்ந்தும் மாவடிப்பள்ளி பிரதான வீதி மின்விளக்கு பிரச்சினைகள், தொலைத்தொடர்பு கோபுர சிக்கல்கள், திண்மக்கழிவற்றல் குறைபாடுகள், தெருமின்விளக்கு ஒளிராமை போன்ற பல பிரச்சினைகள் சபைக்கு முன்வைக்கப்பட்டு தவிசாளரினால் அவற்றுக்கான பதிலும் வழங்கப்பட்டது. குமாரஸ்ரீ விடயத்தில் உங்களுக்கு ஆதரவு வழங்கியதனாலையே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதிதவிசாளர் முன்னின்று நடவடிக்கை எடுக்க முடியும் என தவிசாளர் பதிலளிக்கும் போது தெரிவித்தார். 

மேலும் பிரதிதவிசாளருக்கு எதிராக குமாரசிறியினால் கொண்டுவரப்பட்ட  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரிய பிரேரணை சரியான முறையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமர்ப்பிக்க தவறியதால் தவிசாளரினால் நிராகரிக்கப்பட்டது.



No comments

note