Breaking News

சட்டத்துறையின் முதுசம் தாஹா செய்னுதீன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; கல்முனை மாநகர முதல்வர் றகீப் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இப்பிராந்தியத்தின் அதிசிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்களின் திடீர் மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

சட்டத்துறையில் நீண்டகால அனுப்பமும் முதிர்ச்சியும் பெற்றிருந்த சட்டத்தரணி தாஹா செய்னுதீன் அவர்கள் எனக்கு குருவாக இருந்து வழிகாட்டிய ஒருவர்.

தனது சட்டத்தரணி தொழிலை மிகவும் கண்ணியமாகக் கருதி, மிகவும் நேர்மையாக செயற்பட்டு வந்த அன்னார் சட்டத்துறையில் ஒழுக்க நெறிமுறைகளைக் கடுமையாக கடைப்பிடித்து, ஏனைய சட்டத்தரணிகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்துறை சேவையில் 50 வருடங்களை பூர்த்தி செய்தமைக்காக எமது சட்டத்தரணிகள் சங்கத்தினால் அன்னாரை பாராட்டி கௌரவித்திருந்தோம்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற, திறமையான சட்டத்தரணியாக அறியப்பட்டிருந்த அன்னார், சட்டத்துறையில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் ஓர் உதாரணபுருஷராகத் திகழ்ந்திருக்கிறார்.

அவர்களது மறைவுச் செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருக்கிறோம். இப்பிராந்தியம் ஒரு பழுத்த, பாண்டித்தியம் பெற்ற சட்டத்தரணியை இழந்திருக்கிறது. சட்டத்தரணி தொழிலுக்குரிய முதுசமாகத் திகழ்ந்த அன்னாரது மறைவு எமக்கெல்லாம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனைப் பிரார்த்திகின்றேன்.
மேலும், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவரை நேசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.



No comments

note