இந்த சுதந்திர தினத்திலிருந்து சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்ல அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும் : அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் .ஏ.றாசிக்.
நூருல் ஹுதா உமர்.
இந்த நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாயவை ஆட்சிக்கு கொண்டு வரவும், இந்த அரசை நிறுவவும் பக்கபலமாக இருந்தவர்களில் அக்கரைப்பற்று மக்களும் தேசிய காங்கிரஸின் தலைமையும் முக்கியமானவர்கள். தேசிய காங்கிரசின் தலைமையின் அழைப்பை பின்தொடர்ந்து அக்கரைப்பற்று மக்கள் உட்பட இந்த அரசை பல ஊர்களையும் சேர்ந்த சிறுபான்மை மக்கள் ஆதரித்திருந்தனர். ஆனால் இப்போது சுதந்திரத்தை நினைத்து மக்கள் அச்சப்படும் நிலை உருகியுள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் .ஏ.றாசிக் தெரிவித்தார்.
இலங்கையின் 73 வது சுதந்திர தின விழா அக்கரைப்பற்று பிரதேச சபை முன்றலில் அவரது தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோது விசேட உரை நிகழ்த்துகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில்,
இந்த அரசாங்கம் சிங்களவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடுகள் இல்லாது எல்லா மக்களையும் ஒரே கண்களால் நோக்கி எல்லோருடைய மனதிலும் சகவாழ்வையும், சகோதரத்துவத்தையும் உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் சமாதான புறாக்களை பறக்கவிட்டுள்ளோம். அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாங்கள் இந்த நாட்டின் கௌரவ பிரஜைகளாகவும், தேச பற்றாளர்களாகவும் இன்னும் எங்களின் பயணத்தை இந்த அரசுடன் ஒன்றிணைத்து செல்ல தயாராக இருக்கிறோம். இந்த அரசாங்கம் முஸ்லிங்களின் மனங்களில் தேங்கியிருக்கும் கவலைகளை போக்கி நிம்மதியானதும், சந்தோஷமுமான வாழ்வை உறுதிப்படுத்த இந்த சுதந்திர தினத்திலிருந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம். என்றார்.
இந்நிகழ்வில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழவும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் கிடைக்க வேண்டியும் மத அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டதுடன் சுதந்திர தின நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டது. சமாதானத்தை வலியுறுத்தி தவிசாளர் எம் ஏ றாசிக், உதவித் தவிசாளர் எம் ஏ ஹஸார் உறுப்பினர் ரீ.எம் ஐய்யுப் போன்றோர்கள் வென் புறாக்களை பறக்க விட்டனர். இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான் உட்பட உத்தியோகத்தர்கள், மதரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments