பல பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிபந்தனைகளை முன்வைத்தே அரசுக்கு ஆதரவளித்தோம் : ஹரீஸ் எம்.பி
மாளிகைக்காடு நிருபர் நூருள் ஹுதா உமர்.
மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் சோரம் போகவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நாங்கள் அரசின் அங்கத்தவர்களாக ஒருபோதும் மாறவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமன எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
மு.கா தலைமையகமான தாருஷலாமில் நேற்று இரவு நடைபெற்ற உயர்பீட கூட்டத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசின் முக்கிய தலைவர்கள் 20 ம் திருத்த சட்டமூல வாக்கெடுப்புக்கு முன்னர் எங்களை அணுகி எங்களிடன் ஆதரவு கேட்டபோது ஜனாஸா நல்லடக்க விடயம் முதல் நாட்டில் உள்ள முஸ்லிங்களின் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளையும் அரசின் முக்கியஸ்தர்களுடன் நன்றாக விளக்கி அவர்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை பெற்ற பின்னரே 20 க்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். ஜனாஸா விவகாரம், தனியார் சட்டங்கள், பிராந்திய ரீதியான பிரச்சினைகள் அடங்கலாக பல பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிபந்தனைகளை முன்வைத்தே அரசுக்கு ஆதரவளித்தோம். அவர்களும் எங்களுக்கு நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்தனர். இவற்றை ஊடக வெளிச்சத்தின் முன்னிலையில் கொண்டுவந்தால் கடும்போக்குவாத சக்திகள் குழப்பிவிடுவார்கள் என்பதனாலையே நாங்கள் மௌனமாக இருந்தோம்.
நாங்கள் 20 ம் திருத்தத்தை ஆதரித்து இரு வாரங்களின் பின்னர் ஜனாதிபதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை எமது ஜனாஸாக்களை உலர் பிரதேசமான மன்னாரில் அடக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த விடயம் ஊடகங்களின் வாயிலாக வெளிவந்தவுடன் பௌத்த பிக்குகளும், சில இனவாதிகளும் அரசை எதிர்த்து முரண்பட்டதால் அவ்விடயம் நிறுத்தப்பட்டது. அதன் பின்பும் முஸ்லிம் எம்.பிக்காளான நாங்கள் சளைக்காமல் இரண்டு மாதங்களாக முயற்சித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் வைத்தியர் ஜெனிபர் பெரேராவின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு நியமிக்கப்பட்டு இரு வாரங்களின் பின்னர் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பரிந்துரையையே சிபாரிசு செய்தது. இந்த குழுவின் அறிக்கையையும் அமுல்படுத்த விடாமல் சில சக்திகள் தடுத்தது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது.
எங்களின் முயற்சியை கைவிடாது தொடர்ந்தும் பிரதமரை சந்தித்து இன்னும் காலத்தை இழுத்தடிக்காது உடனடியாக ஜனாஸா விடயத்தில் தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டோம். அதைத்தொடந்து வந்த கடந்த வார பாராளுமன்ற அமர்விலும் கூட பகிரங்கமாக பிரதமர் சபையில் வைத்தே அனுமதிக்க ப்படும் என்று அறிவித்தார். அப்போது சபையில் இருந்த நான் அவருக்கு நன்றி தெரிவித்த போது அதை அவர் அமோதித்தார். இருந்தும் சில மொட்டு சார்ந்த எம்.பிக்கள் ஜனாஸா அடக்க அனுமதிக்கபடமாட்டது என்று மக்களை குழப்பி வருகின்றனர். இதுவும் எங்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கிறது.
அரசாங்கம் தந்த வாக்குறுதியினை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது என்பதை இங்கு வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
இன்னும் காலமேடுத்து எங்களை ஏமாற்றாமல் ஜனாஸா அடக்க உடனடியாக அனுமதிக்குமாறு அரசை கேட்டுக்கொள்வதுடன். மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். இருந்தும் இவ் விடயம் நிறைவேறா சூழ் நிலையில் இவ்விடயத்துக்காக பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் சோரம் போகவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நாங்கள் அரசின் அங்கத்தவர்களாக ஒருபோதும் மாறவில்லை என்பதுடன் எதிரணியில் இருந்து கொண்டு தொடர்ந்தும் சமூக அடக்கு முறைக்கு எதிராக போராடுவோம் என்றார்.
No comments