Breaking News

எம்பிக்களுக்கு எதிராக மு.கா தலைவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? முற்போக்கு சக்திகளுக்கு கட்சியில் இடம் உள்ளதா ?

முஸ்லிம் காங்கிரசின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்ததிற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை மு.கா ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. 


குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இதுபற்றி கடந்த அதியுயர்பீட கூட்டத்தில் விளக்கம் கோரியதனால், நேற்று நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்தில் நான்கு உறுப்பினர்களும் கட்சியைவிட்டு நீக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர்.  


தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் அரசியல் கொள்கைபற்றி ஆழமாக அறிந்தவர்கள் எவரும்,  சமூகத்திற்கு துரோகம் செய்கின்றவர்களை தலைவர் தண்டிப்பாரென்று நம்பியதில்லை. தலைவரது மனோநிலை பற்றி அறியாதவர்கள் மட்டுமே அவ்வாறு நம்பி ஏமாறுவது வழமை. 


தலைவர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக விளக்கம் கோருதல் என்ற மாயையானது காலத்தைக் கடத்தி மக்களை முட்டாளாக்கும் அரசியல் தந்திரோபாயம் என்பதனை இந்த கட்டுரையாளர் ஏற்கனவே கூறியிருந்தார்.   


முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக பதவியேற்று இருபது வருட காலங்களில் மக்களுக்கும், கட்சிக்கும், துரோகம் செய்து காட்டிக்கொடுத்த ஒருவராவது கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரென்ற வரலாறு உள்ளதா என்று வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இதன் உண்மை புரியும். 


அந்தவகையில் மஹிந்தவின் ஆட்சியில் மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை பறித்தெடுக்கின்ற “திவிநெகும” சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்தும், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதுபோல் பட்டியல்கள் ஏராளம் உள்ளன.    


அதுமட்டுமல்லாது கட்சிக்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்தவர்களின் பட்டியலில் தலைவருக்கும் முதன்மை பங்குள்ளது. அதாவது பதினெட்டாவது திருத்த சட்டம், உள்ளூராட்சிமன்ற திருத்தம், மாகாணசபைகள் திருத்தச்சட்டம் போன்றவைகள் முஸ்லிம்களுக்கு பாதகமானவை என்று தெரிந்திருந்தும் அதற்கு தலைவரும், ஒட்டுமொத்த கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து துரோகங்களையும் செய்துவிட்டு, இறுதியில் மக்கள் மத்தியில் குற்ற ஒப்புதல் வழங்குவதன் மூலம், மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்வது வழக்கமாக செய்துவருகின்ற அரசியல் தந்திரோபாயமாகும்.  


அவ்வாறென்றால் கட்சியிலிருந்து பலர் நீக்கப்பட்டார்களே ! அவர்களெல்லாம் யார் ? எதற்காக தலைவரினால் அதிரடியாக நீக்கப்பட்டார்கள் ? என்ற கேள்வி எழக்கூடும். 


பலமிக்க தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூத் உற்பட முஸ்லிம் காங்கிரசில் சக்திமிக்க பலர் கட்சியிலிருந்து தலைவரினால் அதிரடியாக நீக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. அவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொது நோக்கத்திற்காகவோ, கட்சியின் நன்மை கருதியோ நீக்கப்படவில்லை என்பதனை பலர் புரிந்துகொள்ள தவறிவிட்டனர். 


கட்சிக்கோ, சமூகத்திற்கோ துரோகம் செய்வது குற்றமல்ல. மாறாக தலைமைத்துவத்திற்கு துரோகம் செய்வதுதான் குற்றமாகும். 


சமூகத்திற்கு துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. தலைவருக்கு விரல் நீட்டியவர்களே தண்டிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளது. 

இதற்கு ஏற்றாற்போல் அதிஉயர்பீடம் செயல்பட்டு வருகின்றது.  


சமூகத்திற்கும், கட்சிக்கும் துரோகமிழைக்கின்றவர்களுக்கு எதிராக அவ்வப்போது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைளை எடுத்திருந்தால், தலைமைத்துவத்திற்கு எந்த பிரச்சினைகளும் எழுந்திருக்காது. சேற்றில் நாட்டிய கம்புபோல் இல்லாமல் சக்திமிக்க தலைவர் என்ற பெயர் பதியப்பட்டிருக்கும்.  


நாய் குரைத்தாலும் அது வாலாட்டிக்கொண்டு தன்னுடனேயே இருக்கும். ஆனால் பாம்பை பாலூட்டி வளர்த்துவிட்டு இறுதியில் அது கொத்துகின்றது என்று தலைவர் புலம்பித்திரிவதில் எந்தவித பயனுமில்லை. 


இங்கே நாய் என்பது முற்போக்கு சக்திகளைக் குறிக்கும். கட்சிக்குள் நியாயத்திற்காக குரல் எழுப்புகின்ற முற்போக்கு சக்திகள் அவ்வப்போது தந்திரமாக ஓரம்கட்டப்பட்டதே வரலாறாகும். 


எனவே நாய் குரைத்தாலும் அது தன்னுடனேயே விசுவாசத்தோடு இருக்கும் என்ற தத்துவம் தலைவருக்கு புரியாதது காலம் கடத்துகின்ற அரசியலே தவிர, சமூகத்திற்கான நேர்மையான கொள்கை அரசியல் அல்ல என்பதனை காண்பிக்கின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note