திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இல்லாமலாக்கப்பட்டு அம்பாறை, கல்முனை என இரு தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்: உலமா கட்சி கோரிக்கை
நூருல் ஹுதா உமர்
புதிய அரசியல் யாப்பு திருத்தத்துக்காக உலமா கட்சி பல கோரிக்கைகளை பெப்ரல் அமைப்பின் ஊடாக முன்வைத்துள்ளது என அந்த கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் மௌலவி தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகளாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்கள் என்ற முத்தரப்பை கொண்டதாக அமைய வேண்டும், முஸ்லிம்கள் இலங்கையின் தனியான தேசிய இனம் என்பது அரசியல் யாப்பில் தெளிவாக குறிப்பிடுவதுடன், அவர்களின் அரசியல், மத, கலாசார சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், வடக்கு கிழக்கை இணைக்காமல் வடக்கும் கிழக்கும் தனி மாகாணங்களாக இருக்க வேண்டும்.
மாகாண சபை முறை நீக்கப்பட்டு தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் மாவட்ட சபை முறை உருவாக்கப்படல் வேண்டும், மாகாண சபை முறைதான் வேண்டும் என்றால் இலங்கையை ஐந்து மாகாணங்களாக பிரித்து அதை கொண்டு வர முடியும்.
1. வட மாகாணம், 2. கிழக்கு மாகாணம், 3 மத்திய மாகாணம், 4. மேல் மாகாணம், 5. தென் மாகாணம்.
மத்திய மாகாணத்துடன் ஊவா, வட மத்திய மாகாணங்கள் இணைக்கப்படும். மேல் மாகாணத்துடன் வட மேல், சப்ரகமுவ மாகாணங்கள் இணைக்கப்படும்.
திகாமடுள்ள மாவட்டம் என்ற தேர்தல் தொகுதி நீக்கப்பட்டு அம்பாறை தேர்தல் மாவட்டம், கல்முனை தேர்தல் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக ஆக்கப்பட வேண்டும். அத்துடன் பொத்துவில் தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு அக்கரைப்பற்றுக்கென தனித்தொகுதி உருவாக்கப்பட வேண்டும். அதன் படி அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய தொகுதிகள் கல்முனை தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
7. கொழும்பு மாவட்டம் என்பது மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகளவு பணம் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் முழு மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்றும் அம்மாவட்ட மக்கள் அனைவருக்கும் சேவை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளை இணைத்து கொழும்பு மாநகர மாவட்டம் என்ற பெயரில் தனி தேர்தல் மாவட்டமாக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் பாராளுமன்ற உறுப்பினர் தொகை வழங்கப்பட வேண்டும்., அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கெபினட் அமைச்சர் கிடைக்கும் வகையில் நியமிக்கப்பட வேண்டும்.
மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட சபைகள் உருவாகும் போது கல்முனை தேர்தல் மாவட்டம் தனி மாவட்டமாக கருதப்படும். அத்துடன் மாவட்ட சபைகளின் முதல் அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரங்கள் என்பன மாகாண சபைகளுக்கு உள்ளது போல் இருக்கும். அத்துடன் முதலமைச்சருடன் துணை முதல்வர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்.
காத்தான்குடி, கிண்ணியா என்பன தனியான தேர்தல் தொகுதிகளாக்கப்பட வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர் தொகை 225 என்பது 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். தற்போது மக்கள் தொகை அதிகரித்திருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இலவச வாகனம், வாகன பேர்மிட்டுகள் வழங்கப்பட கூடாது.
நாட்டில் ஜனாதிபதியுடன் உப ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இவர் சிறுபான்மையை சேர்ந்தவராக இருக்க வேண்டும், அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் முடிவுக்கு எதிராக நீதி மன்றத்தை நாட முடியாது என்பது நீக்கப்பட வேண்டும், வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியிலும் சலுகைகளிலும் விகிதாசார உரிமைகளிலும் பாரிய பின்னடைவை கண்டு வருவதால் , வடக்கு - கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம் பெரும்பான்மை ஊர்களை இணைத்து மாகாண ரீதியிலான நிர்வாக அபிவிருத்தி அலகு முறையை ஒவ்வொரு மாகாணந்தோறும் ஏற்படுத்த வேண்டும் .
அரச காணிகள் இனங்களின் விகிதாசாரத்திற்கேற்ப நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் , சிங்கள , தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து முஸ்லிம் , தமிழ் கிராமங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸார் அதிக அளவில் இடம்பெற வேண்டும் . முடிந்தளவு ஒரே ஊரைச் சேர்ந்த வர்களை நியமிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்கள் பத்து வீதங்களுக்கு மேல் இருந்தால் அப்பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் அவசியம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கடமையா ற்ற வேண்டும், இஸ்லாம் சமய பாட ஆசிரியர்கள் , அதன் ஆசிரிய ஆலோசகர்கள் , காதி நீதிபதிகள் , முஸ்லிம் திருமண பதிவாளர்கள் என்போர் கட்டாயம் மௌலவிகளாகவும் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் .
தேசிய அளவில் முஸ்லிம் சமூகத்தையும் , நாட்டையும் பாதுகாக்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் அனுசரணையில் அதன் கட்டுப்பாட்டின் கீழ் முஸ்லிம்களுக்கென தனியான இராணுவ பிரிவு உரு வாக்கப்பட வேண்டும், எந்த மதத்துக்கும், இனத்துக்கும் எதிராக யார் பொது ஊடகங்களில் பேசினாலும், எழுதினாலும் அவருக்கெதிராக இன, மத பேதம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சமயத்தலைவர்கள் நேரடி அரசியலில் ஈடு படுவதாயின் அவர்கள் தமது சமய சீருடைகளை களைந்து விட்டு அரசியலில் ஈடுபடும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments