இனப்படுகொலை விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பே : காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில்.
நூருல் ஹுதா உமர்
எங்களின் பிரதேச சபை வரலாற்றில் முதல்தடவையாக ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரம் சர்ச்சையில் முடிந்துள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை என்பது ஒருவரை வஞ்சிப்பது அல்ல. அவரை நெறிப்படுத்துவதே. அவ்வாறு ஒருவரை நெறிப்படுத்த ஆயத்தமாகும் போது ஒரு சமூகத்தை வஞ்சிப்பதாக கருத்துரைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டில் புதிதாக வந்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ 12 ஆண்டுகளின் பின்னர் இனப்படுகொலையை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அது வெறும் கண்துடைப்பே தவிர வேறில்லை. அதை தமிழ் மக்களாகிய நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.
ஒத்திவைக்கப்பட்ட கடந்த சபை அமர்வின் தொடர்ச்சி இன்று சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த சபை அமர்வில் நடைபெற்ற விடயங்களை தணிக்கை செய்யாமல் ஒரு ஊடகவியலாளர் அப்படியே வெளியிட்டதால் நிறைய கேள்விகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 34 சபைகளையும் நல்லிணக்கமாகவே கொன்றுசென்றோம். தமிழ் தவிசாளரை தெரிய 05 முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். முஸ்லிம் உப தவிசாளரை தெரிய தமிழ் உறுப்பினர்களும் வாக்களித்தார்கள். அனால் இன்று நிலை தலைகீழாக மாறியுள்ளது. சபையை கொண்டுநடத்த முடியாவிட்டால் கலைத்து விடுமாறு ஒரு உறுப்பினர் கூறுகிறார். அதை செய்ய நாங்கள் தயாரில்லை. அவர் வேன்றுமென்றால் இராஜினாமா செய்துவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பளித்து விட்டு வெளியேறலாம் என்றார்.
கைவிடப்பட்ட வயல் நிலங்களை மண் கொட்டி மூடுவதை நிறுத்த வேண்டும். அதனால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது எனும் கோரிக்கையை முன்வைத்து பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். பஸ்மீர், எஸ்.சசி, கே.குமாரசிரி, ஜெயராணி ஆகியோர் பிரேரணையை முன்வைத்தனர். பிரேரணை தொடர்பில் கருத்துக்கள் பெறப்பட்டு வாக்கெடுப்புக்கு நடந்தது.
அந்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் கொண்டுவந்த பிரேரணையை நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள விடயத்தை காரணம் காட்டி வாபஸ் பெற்றுக்கொண்டார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், கடந்த சபை அமர்வில் இவ்விடயம் வந்தபோது பிரதிதவிசாளருக்கு ஆதரவளித்திருந்த பஸ்மீர் இப்போது வேறுவிதமாக நடந்துகொள்கிறார். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலே இது என்றார். காணி மாபியா கும்பலில் பஸ்மீரின் கூற்றுப்படி பிரதிதவிசாளரும் உள்வாங்கப்படுகிறார். 5000 க்கும் அதிகமான மக்கள் வாழும் மாளிகைக்காடு பிரதேசத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதனால் கடந்த காலங்களில் காரைதீவு பிரதேச செயலாளர் கைவிடப்பட்ட நிலங்களை மூடி வீடுகட்டி மக்களுக்கு கையளித்ததை முன்னுதாரணமாக கொண்டு நாங்களும் அந்த மக்களுக்கு அப்பிரதேசத்தில் குடியேற அனுமதியளித்து நீர்வழங்கல்,மின்சாரம் போன்ற தேவைகளை நிபர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வெறுமனே அரசியல் செய்ய இவ்விடயத்தை பயன்படுத்துவோரின் முகத்திரை பொதுவெளியில் கிழித்தெறியப்பட வேண்டும் என்றார்.
இங்கு பேசிய ஜெயராணி மற்றும் குமாரஸ்ரீ ஆகியோர் வெள்ள நீர் வடிந்தோடமுடியாமல் இருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரினர். இவ்விடயங்களுக்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக சரியான பொறிமுறைகளை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சபையோரின் கருத்துக்களை பெற்றுக்கொண்டார். வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் உறுப்பினர்களும் எதிராக மற்றும் நடுநிலையாக, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள்.
No comments