என்னை எதிர்த்தவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பேன் என்கின்றார் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் இலங்கையில் ?
“ஜனாதிபதி தேர்தலில் என்னை விரும்பிய மக்களுக்கு மட்டுமல்ல, என்னை எதிர்த்தவர்களுக்கும் நான்தான் ஜனாதிபதி. எனக்கெதிராக வாக்களித்த மக்களின் உரிமைகளையும் நான் பாதுகாப்பேன்” என்று நேற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ வைடன் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கையில் முஸ்லிம் சமூகம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தினால், முஸ்லிம் மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதாக அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு தனது மேலாதிக்க நடவடிக்கைகள் மூலம் வெளியுலகிற்கு ஓர் பயங்கரவாதியாக செயல்பட்டாலும், அமெரிக்காவின் உள்நாட்டில் முழுமையான ஜனநாயகமும், சட்ட நடைமுறைகளும் பேணப்பட்டு வருகின்றது.
இங்கே ஜனாதிபதி ஜோ வைடனின் கருத்தின்மூலம், அவரிடம் அன்பையும், சகிப்புத்தன்மையையும் காணக்கூடியதாக உள்ளது. தங்களுக்குள் என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்கன் என்றரீதியில் அனைவரும் செயல்பட்டு வருகின்றார்கள்.
இதனாலேயே அமெரிக்கா உலகில் முதன்மை வல்லரசாக உள்ளது.
ஆனால் எமது நாட்டில் அவ்வாறில்லை. அன்புக்கு பதிலாக குரோதமும், பழிவாங்கும் செயல்பாடுகளும் மலிந்து காணப்படுகின்றது. அத்துடன் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும், நீதியும், அதிகாரத்தில் இல்லாத மற்றவர்களுக்கு இன்னுமொரு சட்டமும், அநீதியும் காணப்படுகின்றது.
பிரிவினைகளின்றி அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை பாதுகாக்க வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி விரும்புகிறார். ஆனால் எமது நாட்டில் இதற்கு முற்றிலும் மாற்றமான நடைமுறைகள் உள்ளது.
சர்வதேச பயங்கரவாதிகள் என்றபோர்வையில் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்க படைகளால் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்களை அமெரிக்க சிறைகளில் தடுத்துவைப்பதில்லை. மாறாக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள குவாண்டனாமோ சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது வழமை.
கைதிகளை அமெரிக்காவுக்குள் கொண்டு செல்வதென்றால் குடிவரவு குடியகழ்வு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணமாகும்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையினர்கள்கூட அதிகார துஸ்பிரயோகம் செய்யாமல் உள்நாட்டில் சட்டத்தை எவ்வாறு பேணுகின்றார்கள் என்பதனை இது எடுத்துக்காட்டுகின்றது.
எனவே அமெரிக்க ஜனாதிபதி நாட்டை பாதுகாக்க அனைத்து மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் எமது நாட்டில் வாக்களித்த மக்களை மட்டும் பாதுகாப்பதுடன் வாக்களிக்காத சிறுபான்மை மக்களை பழிவாங்கும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர்.
இவ்வாறான் குரோதமான நிலைப்பாடு இருக்கும் வரைக்கும் எமது நாடு முன்னேறுவதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments