Breaking News

முஸ்லிம் சமூகத்தை இனவாதத்திற்கு பலியிட என்னை கட்டம்கட்டுகிறார் தவிசாளர் : பிரதித்தவிசாளர் ஜாஹீர் காட்டம்

நூருல் ஹுதா உமர் 

சபை அமர்வை கொண்டு செல்ல முடியாது தடைகளை ஏற்படுத்துவோர் மீதும் சபை நடவடிக்கைகளில் அநாகரிகமாக நடந்து கொள்வோர் மீதும் மட்டுமே உள்ளுராட்சி மன்ற சட்டத்தின் படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். வெளியில் நடக்கும் முரண்பாடுகளுக்கு சபையில் பிரேரணை கொண்டுவந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதானது சட்டத்தை மீறும் செயலாகும். இந்த தீர்மானம் செல்லுபடியற்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறு என்மீது எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை சட்டவிரோதமானது என முடிவு வந்ததை போன்றே இறுதியில் இந்த முடிவும் வரும் என காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் தெரிவித்தார். 

பிரதேச சபை உறுப்பினர் சஷி, பிரதேச நீர்ப்பாசன அதிகாரி, கிராம நிலதாரி, காரைதீவு தவிசாளர் போன்றோரை பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மாளிகைக்காடு பிரதேசத்தில் வைத்து தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியதாகவும் கூறி அவருக்கு எதிராக சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி பிரேரனை ஒன்றை சபையில் நேற்றைய (22) மாதாந்த அமர்வின் போது முன்வைத்தார். இப்பிரேரணை தொடர்பில் பேசிய போதே ஏ.எம். ஜாஹீர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தனது உரையில், 

இந்த முறையற்ற தீர்மானம் தொடர்பில் கிழக்கு ஆளுநர், மற்றும் உரிய அரச உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். கரைவாகுபற்றில் முதன்முதலாக மண்நிரப்பி கட்டடம் காட்டியது நானல்ல. முன்னாள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே. சுனாமியால் பாதித்த மக்களை எஹெட் சர்வதேச நிறுவன உதவியுடன் வீடமைத்து அங்கு குடியமர்த்தினார். அது போன்று இப்போது இருக்கும் பிரதேச செயலாளரும் அங்கு வீதியமைப்பது போன்ற அபிவிருத்திகளை செய்கிறார். நீர்ப்பாசன திணைக்கள அனுமதியில்லாமல் அங்கு பல விடயங்கள் நடக்கிறது. கடந்த 30 வருடங்களாக விவசாயம் செய்ய தகுதியற்ற நிலமாக இருந்துவரும் அந்த காணிகளை நிரப்பி சனத்தொகை பெருக்கம் காரணமாக குடியேறுவது தவறா? இல்லை வெற்றுக்காணியாக கைவிட்டு குப்பைகளினால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் ஆரம்ப இடமாக மாற்ற சொல்கிறீர்களா? 

எமது பிரதேச சபை கட்டிடம்  முதல் மக்கள் வங்கி, சாராய கடை, புகைப்பட நிலையம், கடைத்தொகுதிகள் என பலதும் இந்த வரிசையில் சதுப்புநிலத்திலையே கட்டப்பட்டுள்ளது. நான் என்னுடைய சொந்த நிலத்தில் தற்காலிய கூடாரம் அமைத்ததை கேள்விக்குட்படுத்தும் நீங்கள் அந்த வரிசையில் இருக்கும் நிரந்தர கட்டிடங்களை அகற்ற முனைவதில்லை ஏன்? நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய காணியில் அத்துமீறி நீங்கள் நுழைந்தது தவறு. எனது காணி விடயத்தில் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் இனவாதமாக செயற்பட்டார்கள். 

என்னுடைய காணியில் நான் சட்டவிரோதமாக ஏதாவது செய்திருந்தால் பொலிஸாருடன் வந்த நீங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களை அல்லது அவர்களின் வேலைத்தள ஆயுதங்களை கைப்பற்றி சட்டநடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அங்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதே நேரம் காரைதீவில் ஒரு கடையில் முன்கதவு வேலைகளை தமிழ் சகோதரர்கள் பகிரங்கமாக செய்தார்கள். அதை நீங்கள் காணவுமில்லை, நடவடிக்கை எடுக்கவுமில்லை இதன் மூலம் உங்களின் இனவாத முகம் தெளிவாக தெரிகிறது. இந்த நடவடிக்கை ஏ.எம். ஜாஹீர் எனும் என் மீது எனக்கு எதிராக எடுத்த நடவடிக்கை இல்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் எதிராக எடுத்த நடவடிக்கையே என்பதை  நாங்கள் நன்றாக அறிவோம் என்றார். 

இதற்கு பதிலளித்த தவிசாளர் கி. ஜெயசிறில், எனக்கு கிராம சேவகர் அழைப்பை எடுத்து பிரதிதவிசாளர் தனது கடமைக்கு இடையூறு செய்வதாக கூறியதனாலையே நான் அங்கு சென்று நடவடிக்கை எடுத்ததாக கூறினார். இவ்விவகாரத்தை சுமூகமாக முடிக்க அழைப்பை ஏற்படுத்தியும் பிரதிதவிசாளர் பதிலளிக்கவில்லை என்றார். இதனை உடனடியாக பிரதிதவிசாளர் சபையில் மறுத்தார். வட்டார உறுப்பினர் இருக்க வேறு உறுப்பினர்கள் வந்து தன்னுடன் முரண்பட்டதாக பிரதிதவிசாளர் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் பேசிய தவிசாளர் தான் அங்கு சென்ற பின்னரே பிரதித்தவிசாளர் களத்திற்கு வந்ததாக தெரிவித்தார். 

இவ்விடயம் வாக்கெடுப்பை நாடிய போது மிகப்பெரும் சர்ச்சை நிலவியது. ஆளும் த.தே.கூ உறுப்பினர் ஒருவர் அடங்களாக ஆறு உறுப்பினர்கள் பிரதித்தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். நான்கு பேர் மட்டுமே தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். மின்குமிழ் ஒளிரச் செய்யும் தொழிலாளி நியமன பிரேரணை தொடர்பில் முரண்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தமையால் இந்த வாக்கெடுப்பில் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் திருப்தியின்மை காரணமாக பலத்த இனவாத கருத்துக்களுடன் கூச்சல் நிலை ஏற்பட்டிருந்தமையால் சபை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments

note