மறைந்த நூறுல் ஹக் காத்திரமான கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்தவர் - அனுதாப செய்தியில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்
அரசியல், சமூகப் பின்னணியில் விமர்சன ரீதியிலான காத்திரமான கருத்துக்களைத் துணிச்சலோடு முன்வைப்பதில் மறைந்த எம்.எம்.எம்.நூறுல் ஹக் முக்கியமான பங்களிப்பைச் செய்திருப்பதாக அன்னாரின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மறைந்த நண்பர் நூறுல் ஹக், என்னுடனும், எனது சகோதரர்களுடனும் பன்னெடுங் காலமாக பழகிவந்த நிலையில், அவரது ஆழ அகலங்களை நாம் நன்கறிந்திருக்கின்றோம்.
எத்தகைய சந்தர்ப்பத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக இருந்து நிலைமைகளை அவதானிப்பதிலும், கிரகித்துக் கொள்வதிலும், பின்னர் அவற்றை எழுத்தில் வடிப்பதிலும் அவருக்கு அபார திறமையிருந்தது.
நாடளாவிய ரீதியில் அவருக்கென பரந்துபட்ட அரசியல், சமூகப் பார்வையொன்று இருந்தது. அதேவேளையில், பெரும்பாலும் கிழக்கையும், வடக்கையும் மையப்படுத்தியதாகவே அவரது கவனக் குவிப்பு இருந்தது.
தேசிய அரசியலோடு, தமிழ் - முஸ்லிம் அரசியலையும் அணுகுவதை நூல்களிலும், கட்டுரைகளிலும் அவர் கையாண்ட விதம் குறித்து சிலவேளைகளில் எனக்கு உடன்பாடிருந்ததில்லை. தனிப்பட்ட முறையிலன்றி, ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் ஏ.எச்.எம்.அஷ்ரபினால் வழிநடாத்துப்பட்டு வந்த கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் அவருடன் அவ்வப்போது முரண்படவும் நேர்ந்திருக்கின்றது.
ஆனால், அவர் அவற்றை ஒரு புன்முறுவலோடு சமாளித்துக் கொள்வார். எதனையும் பெரிதுபடுத்தியதில்லை.
நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு , கண் பார்வை சற்றுக் குன்றியிருந்த நிலையிலும் கூட, முஸ்லிம் அரசியலும், சமூகமும் அவரது இரு கண்களாக இருந்தன என்பது அன்னாருக்கே உரிய சிறப்பம்சமாகும்.
சூபித்துவ சிந்தனையும், அவரது செல் நெறியில் செல்வாக்குச் செலுத்தியதை மறைந்த தலைவர் கூட அப்பொழுதே இனம் கண்டிருந்தார். எமது கட்சியின் ஆரம்ப காலத்தில் அவர் தலைவரோடு ஒத்துழைத்திருக்கின்றார்.
சாய்ந்தமருதின் இன்னுமோர் இலக்கிய, ஊடக ஆளுமை சரிந்திருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு மேலான சுவன வாழ்வை வழங்குவதோடு, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும், ஊடக உறவுகளுக்கும் ஆறுதல் அருள்பாளிப்பானாக.
No comments