Breaking News

சிரேஷ்ட ஊடகவியலார் நூறுல் ஹக்கின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பாகும்; கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிரேஷ்ட ஊடகவியலாளரும் நாடறிந்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான எம்.எம்.எம்.நூறுல் ஹக் அவர்களின் திடீர் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும் எழுத்து, இலக்கிய, ஊடகத் துறைகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

ஊடக வித்தகர் எம்.எம்.எம்.நூறுல் ஹக் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முதல்வர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"மிகவும் ஆற்றல், ஆளுமை, துணிச்சல் நிறைந்த எழுத்தாளர் நூறுல் ஹக் அவர்கள் என்னுடன் நீண்டகால நட்பைக் கொண்ட ஓர் இனிய நண்பராவார். சந்திப்புகள் கிடைக்கும் போதெல்லாம்.சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள் இருவரும் நிறையவே விவாதித்திருக்கிறோம். யாராக இருந்தாலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதில் ஒருபோதும் அவர் பின்நிற்பதில்லை.

சமூகப் பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்வதில் அவர் பெரும்பங்காற்றியுள்ளார். அவரது பத்தி எழுத்துக்களில் துணிச்சலான விமர்சனங்களைக் காண முடியும். சமூக விடயங்கள் தொடர்பிலான அவரது விமர்சனப் பார்வையில் சில சமயங்களில் எமக்கு முரண்பாடுகள் தோன்றியபோதிலும் அவர் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் என்கிற ரீதியில் அவரையும் அவரது ஊடகப் பணியையும் நான் எப்போதும் மதித்தே வந்திருக்கிறேன்.

எங்களிடையே அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்து வந்தபோதிலும் அவை ஒருபோதும் எங்களது நட்புக்கு குந்தகமாக அமைந்து விடவில்லை. எல்லோருடனும் அந்த ரீதியிலேயே அவர் பழகி வந்திருக்கிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒழுக்கம், பண்பாடுகளை மீறுகின்ற ஒருவராக நாம் அவரைக் காணவில்லை.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான ஓர் உள்ளூராட்சி சபை வேண்டும் என்ற கருவை அவரே விதைத்திருந்தார். அவரது கருத்துக்களும் செயற்பாடுகளுமே அக்கோரிக்கையின்பால் மக்களை அணி திரட்டி, போராட்டத்திற்கு வித்திட்டிருந்தன. அக்கோரிக்கையில் எனக்கு உடன்பாடில்லை என்றபோதிலும் அவரது எழுத்தாளுமையின் தாக்கம் அப்பிரதேசத்தின் வரலாற்றில் முக்கிய பதிவாகியிருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

பொதுவாக அரசியல், சமூக, இலக்கிய, சன்மார்க்க ஆய்வுப் பணிகளில் நண்பர் நூறுல் ஹக் அவர்களின் தேடலும் சமர்ப்பணங்களும் மிகவும் கனதியான அமைந்திருந்தன. அவரது எழுத்துகளில் உயிரோட்டம் காணப்பட்டது. அவரது திடீர் மறைவினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என்பது நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனைப் பிரார்த்திகின்றேன். மேலும், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவரை நேசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



No comments

note