சிலோன் மீடியா போரத்தின் சேவைகள் பாராட்டப்பட வேண்டியவை : காத்தான்குடி நிவாரண பணியின் போது புகழாரம் !
(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம் )
இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் காத்தான்குடி பிரதேச ஊடக உறவுகளின் நலன் கருதி நீண்ட தூரம் பயணித்து இந்நிவாரண உதவிகளை கொண்டு வந்து உதவிய சிலோன் மீடியா போரத்தினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளும் இந்த நேரத்தில் இந்த உதவியை செய்ய முயற்சிகளை மேற்கொண்ட உங்களின் சேவையை பாராட்டுகிறேன்.
கடந்த சுனாமி காலத்தில் பல சிக்கல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்களை அம்பாறை ஊடக நண்பர்களுக்கு கொண்டு சேர்த்த நினைவுகளை நினைவு கூறியதுடன் இன்று நீங்கள் இக்கட்டான காலகட்டத்தில் எங்களின் நலனுக்காக வந்த போது எங்களின் மத்தியில் மேலும் சகோதரத்துவம் துளிர்விடுகின்றது என காத்தான்குடி ஊடகவியலாளர்கள் சார்பில் பேசிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.
அம்பாறை மாவடத்தின் அக்கரைப்பற்று, கல்முனை பகுதியை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக சிலோன் மீடியா போரத்தின் நிவாரணப் பணி தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத் தலைமையில் முடக்கப்பட்டிருக்கும் காத்தான்குடி பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (16) மாலை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ரீ.எல்.ஜவ்பர்கான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறந்த முன்மாதிரியாக தொழிற்பாடும் சிலோன் மீடியா போரம். முன்மாதிரியான பல முன்னெடுப்புக்களை மட்டுமின்றி ஊடகவியலாளர்களுக்கிடையே நட்புறவை வளர்ப்பதிலும் முன்னோடியாக திகழ்வது தொடர்பில் ஊடக நண்பர்களாக மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், செயற்குழு உறுப்பினர்களான எம்.பி.எம்.றிம்சான், எம்.என்.எம். அப்ராஸ், ஏ. எம்.பறக்கத்துல்லா, ஐ.எல்.எம். நாஸிம் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments