இதயசுத்தியுடன் செயல்படுகின்ற தமிழ் தலைமைகள். ஆனால் முஸ்லிம் தலைமைகள் ? இதனால் பாதிக்கப்படுவது யார் ?
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் காட்டுப் பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தளத்தை அகற்றிவிட்டு, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி என்றபோர்வையில் குறித்த பிரதேசம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு பௌத்த வழிபாட்டுத் தளமும் நிறுவப்படுவதையடுத்து, இதனை தமிழ் தரப்பு சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
குறித்த இடம் காட்டுப்பகுதியில் இருப்பதனால் தமிழ் அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பல சிரமத்துக்கு மத்தியில் காட்டுப்பகுதிக்குள் நீண்ட தூரம் நடந்து சென்று அங்கு இருந்த தொல்பொருள் அதிகாரிகளுடனும், இரானுவத்தினர்களுடனும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தனது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்று நியாயம் கோரியதானது பாராட்டத்தக்கது.
முஸ்லிம்களின் தாயகப்பிரதேசமான இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டபோதும், மற்றும், பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரைக்கும் முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டபோதும் எமது முஸ்லிம் தலைவர்களும், பிரதிநிதிகளும் நடந்துகொண்டது போன்று தமிழ் தலைவர்கள் நடந்துகொள்ளவில்லை.
அதாவது “அது காட்டுப்பகுதியில் உள்ள அரச நிலம். அங்கு சிலை வைப்பதனால் எமக்கு என்ன பிரச்சினை ? நமக்கெதற்கு அரசாங்கத்துடன் வீண் பகை ? நாங்கள் அரசாங்கம் தருகின்ற சலுகைகளை பெற்றுக்கொண்டு நின்மதியாக ஆடம்பர மாளிகைகளில் உல்லாசமாக வாழ்ந்தால் போதும்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு,
மறுபுறம் வெளித்தோற்றத்தில் அப்படியும், இப்படியும் ஊடகங்களில் அறிக்கைகளைவிட்டு முஸ்லிம் மக்களை முழுமையாக ஏமாற்றியது போன்று தமிழ் பிரதிநிதிகள் தங்களது மக்களை ஏமாற்றவில்லை. அதற்கு ஏற்றாற்போல் அரசியல் காய் நகர்த்தவுமில்லை.
பாராளுமன்றத்தில் தனது மக்களுக்காக துணிச்சலுடன் உரையாற்றிவிட்டு தனது கடமை முடிந்துவிட்டது என்ற பம்மாத்து அரசியல் செய்து தமிழ் மக்களை இந்த பிரதிநிதிகள் ஏமாற்றவில்லை.
இதய சுத்தியுடனும், முழு மனதுடனும் தனது மக்களுக்காகவும், எதிர்கால சந்ததிகளுக்காகவும் ஒரு இஞ்சி நிலத்தையும் விட்டுக்கொடுக்காமல், தங்களது தாயகப் பிரதேசத்தை பாதுகாக்க தமிழ் தலைமைகள் போராடுவது குருந்தூர் பிரச்சினையில் தெரிகின்றது.
ஆனால் முஸ்லிம் தலைவர்களும், பிரதிநிதிகளும் இதற்கு முற்றிலும் மாற்றமானவர்கள். அதாவது இவர்களிடம் தூர நோக்குமில்லை, எதிர்கால திட்டமுமில்லை, கொள்கையுமில்லை, துணிச்சலுமில்லை.
ஆனால் பணம் இருக்கின்றது, பம்மாத்து இருக்கின்றது, சிறந்த நடிப்பு இருக்கின்றது, நயவஞ்சகத்தனமும் இருக்கின்றது இதனால் முற்றாக பாதிக்கப்படுவது இன்றைய சமூகம் மட்டுமல்ல, எமது எதிர்கால சந்ததிகளும், எமது தாயக நிலமும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments