Breaking News

சம்மாந்துறை நபரின் ஜனாஸா தகனத்திற்கெதிரான வழக்கு தள்ளுபடி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நேற்று திங்கட்கிழமை (04) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்காளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் கண்டறிவதற்காக மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி, தமது வாதங்களை முன்வைத்தனர்.

அதேவேளை, அத்தகைய விசாரணைக்கான அவசியம் எமக்கு எழவில்லை எனவும் அந்த உடலத்தை தகனம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸாரினால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான், மரண விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் அதேவேளை உடலத்தை தகனம் செய்வதற்கும் தம்மால் அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்து, குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபரின் ஜனாஸாவை, இன்று செவ்வாய்க்கிழமை (06)  தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments

note