Breaking News

கிழக்கு மாகாண பொறியியலாளர்கள் இடமாற்றத்தில் தில்லுமுல்லு : ஜனாதிபதி, பிரதமர், ஆளுநருக்கு நீதிகேட்டு மகஜர்.

கிழக்கு மாகாண சபையில் கடமை புரியும் பொறியியலாளர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த  இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பொறியியலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் இதில் அரச தலைவர்கள் தலையிட்டு நீதி பெற்றுத்தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருக்கு மகஜர் ஒன்றை வழங்கியுள்ளனர்.  

அவர்கள் அனுப்பியுள்ள மகஜரில் கிழக்கு மாகாண சபையில் கடமை புரியும் பொறியியலாளர்களுக்கான 2021ம் ஆண்டிற்கான இடமாற்ற விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற சபையின் முடிவுகள் ரகசியமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இடமாற்ற சபையின் இடமாற்ற முடிவுகளை அவதானிக்கும் போது அது மிகுந்த கவலையினை தருகின்றது. நிறைவேற்றுத் தரத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொள்ளும் திறமையான பொறியியலாளர்களின் நிலை சாதாரண ஊழியர்களின் இடமாற்ற செயற்பாட்டினை விட கேவலமான முறையில் நடந்தேறியுள்ளதை அவிடமாற்றத்தில் அவதானிக்க முடிகின்றது.

தாபன விதிக்கோவையின் அத்தியாயம் lll குறிப்பிடப்பப்படுள்ள இட மாற்றம் தொடர்பான எந்த விதி முறைகளும் முறையாக பின் பற்றப்பபடவில்லை என்பதுடன் இடமாற்ற சபையினால் நிர்ணயிக்கப்பட்ட இடமாற்றத் திட்டம் , இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த அலுவலர்களுக்கு அறியப்படுத்தத்தப்பட வில்லை .

ஏனைய அதிகாரிகள், அரச சேவையாளர்களின் இடமாற்ற அறிவித்தல்கள் போன்று இடமாற்ற சபையின் முடிவுகள் பகிரங்கமாக வெளியிடாமல் இராணுவ ரகசியம் போன்று மிக பரகசியமாக இவ்விடமாற்றங்கள் நடந்து முடிந்திருக்கிறது. 

ஒவ்வொரு அலுவலரும் சேவை நிலையம் ஒன்றில் (விரும்பத்தகாத நிலையத்தில் பணி புரிவதற்குரிய குறைந்த பட்ச காலம் 2 வருடங்கள் என தாபன விதிக்கோவை அத்தியாயம் lll, 3.8.2 ல் குறிப்பிடப்பட்டுள்ள போதும்  இரண்டு வருடங்களுக்கு குறைவான சேவைக்காலத்தை உடைய அலுவலர் தனது தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக இடமாற்ற கட்டளையினைப் பெற்றுள்ளார். மறுதலையாக இட மாற்றம் பெற்று 2 வருடங்களிற்கு குறைந்த சேவைக்காலத்தையே தற்போதைய சேவை நிலையத்தில் கொண்டுள்ள அலுவலர்க்கும் சிலரது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இடமாற்ற கட்டளை வழக்கப்பட்டுள்ளது.

தாபன விதிக்கோவை அத்தியாயம் lll, 3.0 வின் படி இடமாற்றம் தொடர்பான மேல்முறையீட்டுக்கான எந்த வித சந்தர்ப்பங்களும் வழங்கப்படவில்லை என்பதுடன் தாபன விதிக்கோவை அத்தியாயம் lll, 3.4.2 இன் நடைமுறையினை மீறி இடமாற்றக் கட்டளையானது ஒரு மாதத்திலும் குறைந்த கால அவகாசத்தினைக் கொண்டுள்ளது.

இவ் இடமாற்ற முடிவுகளின் அடிப்படையில் சிரேஷ்ட பொறியியலாளராக (chief engineer) இடமாற்றம் பெற்று வருபவரின் கீழ் கடமையாற்ற அவரைவிட முது நிலையில் (senior) உள்ள பொறியியலாளர் ஒருவர் நிறைவேற்று பொறியியலாராக (executive engineer) நியமிக்கப்பட்டுள்ளமை வேடிக்கையானதாகும். 

மேற்குறிப்பிட்ட விடயங்களை உற்று நோக்கும் போது இது கிழக்கு மாகாண சபையின் நிர்வாக சீர்கேடா? அல்லது அரசியல் செல்வாக்கின் விளைவா? அல்லது அதிகார துஸ்பிரயோகமா? அல்லது சம்பந்தப்பட்ட சிலரின் தந்திரோபாய மந்திரோபாய காய் நகர்த்தல்களா ? என்பதும் புரியவில்லை. இவைகளெல்லாம் இப்படி இருக்க 

சில பொறியியலாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப 10 வருடங்களிற்கு மேலாக ஒரே நிலையத்தில் கடமை புரிகின்றனர். சில பொறியியலாளர்களுக்கு தங்களது சேவை முன்னடைவுகளை சரியான முறையில் பெற்றுக் கொள்வதற்கு தகுந்த இடங்கள் வழங்கப்படுவதுமில்லை.சில நிலையங்கள் கவனிப்பார் அற்று இருக்கின்றது அவற்றிக்கு தகுதியான பொறியியலாளர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

ஜனாதிபதியின் எண்ணத்தில் உருவான சுபீட்சத்தின் நோக்கை வெற்றிகரமாக அமுல்படுத்த இப் பொறியியலார்களின் இடமாற்ற செயற்பாடுகள், ஒரு தகுந்த குழு ஒன்றின் மூலம் ஆராயப்பட்டு சீர் செய்யப்பட ஆவன செய்யப்பட வேண்டும். என அந்த மகஜரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.



No comments

note