அதிகாரத்தை பிழையாக கையாளும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் : ஒரே காணியில் அடிக்கடி மாறும் விளம்பர பதாதை.
அபு ஹின்ஸா
தமக்கில்லாத அதிகாரங்களை தனக்கு இருப்பது போன்று மாயையை தோற்றுவித்து கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினர் தனது கௌரவத்தையும் மான்பையும் பிழையாக கையாளுகின்றனர். கல்முனை மாநகர சபை நிர்வாகத்திற்கு காணியதிகாரம் இருப்பதாக எண்ணிக்கொண்டு சில வாரங்களுக்கு முன்னர் மருதமுனை கடற்கரை வீதியில் "இந்த வளவு கல்முனை மாநகர சபைக்கு சொந்தமானது இந்த காணியில் கலாச்சார மண்டபம் கட்டப்படப்போகிறது" என்று விளம்பர பதாதையை கல்முனை மாநகர காட்சிப்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய அரசியல் செயற்பாட்டாளர் இஸட். ஏ. நௌஷாட் தெரிவித்தார்.
இன்று (27) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,
இதனை அவதானித்த நான் இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை ஆராய கல்முனை பிரதேச செயலகத்திற்கு தகவலறியும் சட்டமூலம் ஊடாக வினவிய போது குறித்த தகவல் தரும் அதிகாரி தமக்கு இந்த விடயம் நான் சுற்றிக்காட்டும் வரை தெரியாதென்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். மாத்திரமின்றி கல்முனை மாநகர சபைக்கு காணியதிகாரம் இல்லை என்றும் அந்த விளம்பரத்தை காட்சிப்படுத்த நாங்கள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் அந்த பதாதையில் எழுதப்பட்டிருப்பதை போன்று அலுவலக காணி உத்தியோகத்தருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மறுத்துள்ளார். இப்படியான தேவையில்லாத வேலைகளினால் தேவைக்கதிகமான செலவீனங்களை செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் இந்த செயற்பாடு கண்டிக்கத்தக்கது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பை மீறி இனரீதியான பிரதேச செயலகம் கல்முனையில் இருப்பதாகவும் அந்த பதாதையில் குறிக்கப்பட்டுள்ளது. "கல்முனை பிரதேச செயலகம்- முஸ்லிம்" என எவ்வித அரச வர்த்தமானி அறிவித்தாலும் நானறிந்தவகையில் இலங்கையில் வெளியாக வில்லை. அப்படி "கல்முனை பிரதேச செயலகம்- முஸ்லிம்" எனும் அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிருந்தால் அந்த வர்த்தமானி இலக்கத்தையும் அது வெளியான திகதியையும் கல்முனை மாநகர சபை அதிகாரிகள் மக்களுக்கு பகிரங்கப்படுத்த முன்வர வேண்டும்.
பொதுமக்களின் பாவனைக்கு இருந்த வீதியையும் அடைத்து வேலிபோட்டு இப்போது இந்த காணி கல்முனை மாநகர சபைக்கு சொந்தமானது என அச்சிட்டு முந்தைய விளம்பரத்தை அகற்றிவிட்டு இரண்டாவதாக ஒரு விளம்பரத்தை அங்கு இப்போது நட்டுள்ளார். மக்களை பிழையாக வழிநடத்தும் கல்முனை மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலாச்சார மண்டப அமைவிடங்கள் தொடர்பிலும் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி மன்ற மாகாண சபைகள் அமைச்சர் போன்றோருக்கு எழுத்து மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைத்துளேன்.
புதிதாக அமைய இருக்கும் கலாச்சார மண்டபத்தை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச காணியில் அல்லது பழைய மக்கள் மண்டபத்தை உடைத்துவிட்டு அக்காணியில் நவீன கலாச்சார மண்டபம் உருவாக்குதல் அல்லது 65 மீட்டர் மெட்டுவட்டை குடியிருப்பு அல்லது பிரான்ஸ் சிட்டி வீடமைப்பு பிரதேசத்தில் அமைப்பதே சாலப்பொருத்தமாக இருக்கும். அதுதான் மக்களுக்கு நன்று உபயோகமாகவும் இருக்கும் எனும் முன்மொழிவையும் முன்வைத்துள்ளேன்.
பதாதை விவகாரம் தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளரிடம் நான் வினவியபோது அந்த விளம்பர பதாதை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அப்படியாயின் அவரின் பதவியையும், பெயரையும் பயன்படுத்தி இவ்வாறான வேலைகளை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? புதிய புதிய வரிகளை அறிமுகம் செய்து அதனுடாக அப்பாவி ஏழை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் கட்டும் வரிப்பணத்தை கொண்டு இப்படி தேவையில்லாத வேலைகளை செய்துவரும் கல்முனை மாநகர நிர்வாகம் இப்படியான வேலைகளை இனியும் செய்ய கூடாது என கேட்டுக்கொள்கிறேன்- என்றார்.
No comments