கல்முனை தனிமைப்படுத்தல் தீர்மானம் தொடர்பில் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் விளக்கம்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தனக்கெதிராக பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது;
கடந்த 16-12-2020 புதன்கிழமையன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடற்கரைப்பள்ளி வீதியை மையப்படுத்தி 90 பேருக்கு எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜென் பரிசோதனையில் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் சுகாதாரத்துறையினரும் என்னிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அன்றைய தினம் இரவு மாநகர சபையில் எனது தலைமையில் அவசர ஒருங்கிணைப்புக் கூட்டமொன்று கூட்டப்பட்டது.
அக்கூட்டத்தில் பிராந்திய மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மாநகர சபையின் சில உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியினது அறிக்கையின்படி மக்களின் ஒத்துழைப்பின்மையால் ஏற்படக்கூடிய பாரதூர நிலைமையின் அவசியம் கருதி சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களின் பேரில் அனைவரதும் ஆலோசனைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கமைவாக கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்களை நேற்று வியாழக்கிழமை (17-12-2020) தனிமைப்படுத்தல் பிரதேசமாக மூடி, அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
நேற்று வியாழன் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.ரிஸ்னி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாநகர சபையில் இடம்பெற்ற, மேற்படி அனைத்து தரப்பினரும் பங்குபற்றிய அவசர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கல்முனை ஸாஹிரா வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான பிரதேசங்களை தனிமைப்படுத்தி, அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதில் மக்கள் நலன் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, எவருக்கும் வேறெந்த உள்நோக்கமும் இருக்கவில்லை என்பது கூட்டத்தில் பங்குபற்றிய கல்முனை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.
அதேவேளை, கல்முனை தமிழ் பிரதேசங்களில் 450 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கணேஸ்வரன் மற்றும் அப்பிரதேசத்திற்கான மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெரீத் ஆகியோர் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியிருந்தனர்.
மருதமுனையில் ஒருவர் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டபோது அப்பிரதேசத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது பெற்றோரைத் தவிர வேறு எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.ரிஸ்னி உறுதிப்படுத்தியிருந்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளபோதிலும் அவர்கள் மூன்று, நான்கு குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனவும் சமூக பரவலாக அது மாறவில்லை எனவும் அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பரிசோதனைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பதாகவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் மாநகர சபையில் இடம்பெற்ற கூட்டங்களில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் கல்முனைப் பிரதேசத்தில் கொவிட் தொற்று பரந்த அடிப்படையில் ஏற்படுவதாகவும் பொது மக்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை எனவும் இப்பிரதேசத்தில் நிலைமை பாரதூரமாக மாறி வருவதாகவும் தமது பணிகளை செய்வதற்கு இப்பிரதேசத்தை பகுதி பகுதியாக தனிமைப்படுத்த ஆவன செய்து தரப்பட வேண்டும் எனவும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.ரிஸ்னி இக்கூட்டங்களில் வலியுறுத்தினார்.
ஒரு பிரதேசத்தில் குறித்த பரிசோதனைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரா விட்டால் சுகாதாரத்துறையினரால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருக்கும். இதற்கு அதிகளவு படையினர் தேவைப்படும். அதனாலேயே பகுதி பகுதியாக தனிமைப்படுத்தி, சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே கல்முனையை தனிமைப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
நிலைமை இவ்வாறிருக்க சில அரசியல் கோமாளிகள், மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள், கல்வியின் வாசமே இல்லாதவர்கள், முகநூல் விபச்சாரிகள் தங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்திக் கொண்டு, என் மீது களங்கம் கற்பிக்க அரசியல் காரணங்களைத் தேடுவதில் குறியாக உள்ளனர்.
கொவிட் கட்டுப்பாடு நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்காக அனைத்து துறையினரையும் ஒருங்கிணைப்பு செய்வது மாத்திரமே எனது பணியாகும். தீர்மானம் மேற்கொள்வது சுகாதாரத்துறையினரின் பொறுப்பாகும். இதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.
அதேவேளை கல்முனையில் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 150 அன்டிஜென் பரிசோதனையில் 04 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இன்று கல்முனைக்கு வருகை தருகின்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறியக்கிடைக்கின்றது.
எனது ஊர் மருதமுனை என்பதற்காக கல்முனையின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கு நான் முனைவதாக முகநூல் விபச்சாரிகளாக இருக்கின்ற அரசியல் கோமாளிகள் நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனை வைத்து பிரதேசவாதங்களை தூண்டுவதற்கும் இனங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் இந்த அரசியல் கோமாளிகள் வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
அவர்களது அஜந்தாக்களுக்கு பலியாக வேண்டிய தேவை எனக்கில்லை. ஆகையினால் இனிமேல் கல்முனை மாநகர பிரதேசங்களில் கொவிட் கட்டுப்பாடு செயற்பாடுகள் தொடர்பில் முதல்வர் என்ற ரீதியில் எனது வகிபாகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியேற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இதன் பாதக விளைவுகளுக்கு கொவிட் தடுப்பு செயற்பாடுகளை சீர்குலைக்க முனைவோரே பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன் அவர்களது விடயத்தில் மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
No comments