Breaking News

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தெரிவிப்பு

(சர்ஜுன் லாபீர்)

எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது அதனால்தான் அரசாங்கம் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு பல்வேறுபட்ட செயற்திட்டங்களை அமுல்ப்படுத்தி வருகின்றது. என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தெரிவித்தார்.

பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முகமாக முறையான தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு பயிற்சி நெறியில் பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் பெண்கள் ஆற்றுகின்ற பங்களிப்புக்கள் பெறுமதிமிக்கவை என்பதோடு கணவனை இழந்த பெண்கள் தாங்கள் மனதளவில் பின்னடைவு கொள்ளக் கூடாது என்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை தனித்தன்மையோடு அரசாங்கம் விசேடமாக கவனம் செலுத்தி வருக்கின்றது.அதற்காக எமது நாட்டின் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு தாங்கள் ஒவ்வொருவரும் நன்றிக்கடன் மிக்கவர்களாக திகழ வேண்டும்.

இன்று உலகில் கலை,காலச்சாரம் அரசியல்,சமூகவியல்,வாழ்வியல், மற்றும் பொருளாதாரம் என பல துறைகளில் பெண்கள் தடயங்களை நிலைநாட்டி உள்ளார்கள். அந்த தடயங்களை நமது பிரதேச பெண்கள் ஒவ்வொருவரும் சவாலாக எடுத்து நமது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்

மேலும் தங்களுக்கு வழங்கப்படும் தையல் இயந்திரங்கள் எந்நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றதோ அந்த நோக்கத்தினை நிறைவவேற்றாவிடின் குறித்த தையல் இயந்திரங்கள் உடன் எமது உத்தியோகத்தர்களால் கையேற்கப்பட்டு அது வேறொரு பயனாளிக்கு வழங்கப்படும் என்பதனை அறியத்தருவதோடு பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் தங்களின் வீடுகளுக்கு வந்து களப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகிறேன் எனவும் குறிப்பிட்டார்.





No comments

note