ஈரானுக்குள் ஆழ ஊடுருவியுள்ள மொசாட். ஈரானிய நிபுனர்களின் தொடர் மர்ம கொலைகளுக்கு இஸ்ரேலை பழிவாங்குமா ?
இஸ்லாமியர்களை பிரித்தாள்வதிலும், அவர்களின் கைகளாலேயே அவர்களது கண்களுக்குள் குத்துகின்ற தந்திரோபாயத்திலும் பல தசாப்தங்களாக இஸ்ரேல் வெற்றிபெற்று வருகின்றது.
இஸ்ரேலின் புலனாய்வுத் துறையான மொசாட் அமைப்பின் பணத்திற்காக சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் பாலஸ்தீன போராளிகளை காட்டிக்கொடுத்ததனாலேயே அப்போராட்டம் வெற்றிபெற முடியவில்லை.
அதுபோல் உலகின் பல நாடுகளில் மொசாட் அமைப்பின் வலைப்பின்னல்கள் விரிந்து காணப்படுகின்றது. அது ஈரானையும் விட்டுவைக்கவில்லை.
மத்தியகிழக்கில் ஒரேயொரு அணு ஆயுத நாடான இஸ்ரேல் தனது ஆயுத பலத்தினாலும், அமெரிக்காவின் உதவியினாலும் தன்னை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளை கண்காணித்து வருகின்றது.
அதேநேரம் அணு குண்டுகளை தயாரிப்பதற்கு வல்லமை பெற்ற ஈரான் போன்ற பலமான இஸ்லாமிய நாடுகளுக்குள் ஆழ ஊடுருவி, ஈரானின் அணு உலைகளை அழித்தொழிக்கும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், அதனுடன் சம்பந்தப்பட்ட சில நிபுணர்களையும் கொலை செய்துள்ளது.
மொசாட் அமைப்பானது மிகவும் பாதுகாக்கப்பட்டிருந்த ஈரானின் அணு ஆயுத ரகசியங்களை திருடிச்சென்று அமெரிக்காவிடம் கையளித்தது. அதனாலேயே 2018 இல் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதுடன் ஈரான்மீது இறுக்கமான பொருளாதார தடையினை விதித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (27.11.2020) ஈரானின் பிரதம அணு விஞ்ஜானி மொஹ்சன் பக்ரிசாதி கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலைக்கு அமெரிக்காவின் கூலிப்படைகளான யூதர்கள் செயல்பட்டதுடன், இதற்கு சவூதி அரேபியாவின் அனுசரணையும் இருந்ததாக ஈரான் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
“ஈரானின் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முன்னோடியாக மொஹ்சான் பக்ரிசாதி செயல்படுகின்றார்” என்று சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலிய பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்தே மொஹ்சான் பக்ரிசாதி அவர்கள் இஸ்ரேலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்று கணிக்க முடிந்தது.
ஈரானில் விஞ்ஜானிகள் கொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஐந்து வருடங்களுக்குள் விஞ்ஜானிகளும், அணு ஆயுத மற்றும் இராணுவ தொழிநுட்ப வல்லுனர்களும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
2018 இல் ஈரானின் இரண்டு அணு விஞ்ஜானிகள் மொசாட்டுடன் தொடர்பிருந்ததனை அறிந்த ஈரானிய புலனாய்வுத்துறையினர் அவர்களை கைது செய்யசென்ற சில வினாடிகளுக்குள் நாட்டின் எல்லையை கடந்து தப்பித்தனர். இவர்களை மொசாட் அமைப்பினர் பத்திரமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று தஞ்சம் வழங்கினர்.
இஸ்லாமிய நாடுகளின் இராணுவ, புலனாய்வு, அணு விஞ்ஜானிகள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப உயர் மட்டத்தினர்களை தங்களின் வலையில் சிக்கவைப்பதில் மொசாட் அமைப்பினர் வெற்றிபெற்று வருகின்றனர்.
தங்களது வலையில் சிக்கியவர்களுக்கு தாராளமாக சன்மானங்களை வழங்கி வருவதுடன், அவ்வாறு தங்களின் வலையில் சிக்காதவர்களை மர்மமான முறையில் கொலை செய்வதும் ரகசியமான விடயமல்ல.
கடந்த ஜனவரி மாதம் ஈரானின் தளபதியான ஹாசிம் சுலைமானி அவர்கள் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தினால் கொலை செய்யப்பட்டதற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடாத்தி அதற்கு பழி வாங்கியது.
அதுபோல் ஈரான் அணு விஞ்ஜானியான மொஹ்சான் பக்ரிசாதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலை பழிவாங்கப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்புக்கு பின்பு இஸ்ரேலின் எந்த இடத்தினை ஈரான் தாக்கும் என்று தெரியாத நிலையில், இஸ்ரேல் தனது வெளிநாட்டில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளது.
அவ்வாறு இஸ்ரேலை ஈரான் தாக்குவதென்றால் லெபனான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் உள்ள ஹிஸ்புல்லாஹ், ஹௌதி போன்ற ஈரானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய இயக்கங்கள் மூலமாக தாக்குதல் நடாத்துமா அல்லது நேரடியாக ஈரான் தாக்குதலில் ஈடுபடுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments