கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு விடுக்கும் அறிவுறுத்தல்கள்
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினருக்கும், கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான கொரோனாவினை கட்டுப்படுத்துவது சம்மந்தமான கலந்துரையாடல் இன்று(02) பொதுச் சந்தை காரியாலயத்தில் அதன் தலைவர் ஏ.பி ஜமால்த்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அதனை உடனடியாக வர்த்தகர்கள் மத்தியில் அமுல்ப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மரக்கறி மொத்த வியாபாரிகள் அவர்களுக்கென வழங்கப்பட்ட உரிய கடையினுள் மாத்திரம் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். (அதாவது வடிகான் உட்பக்கமாக )மற்றும் பொதுச் சந்தைக்கு அன்றாடம் பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்கள் காலை 7மணிக்கு முன்பாக அவ்விடத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். ( இவ்விடயத்தில் அந்த வாகனத்தில் உள்ள பொருட்களுக்கு சொந்தமான கடை உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்)
மேலும் கல்முனை சந்தையின் பன்சாலை வீதியின் இரு பக்கமாகவும் வியாபாரங்களை மேற்கொள்ளும் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் ரெஸ்ட் ஹவுஸ் வீதியில் வியாபாரங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.என்பதோடுதினந்தோறும் சந்தைக்கு பொருட்களை இறக்கி,ஏற்ற வரும் வாகனங்களுக்குரிய சாரதிகள்,ஊழியர்கள் போன்றோரின் தகவல்களை அந்தந்த கடை உரிமையாளர்கள் திரட்டி வர்த்தக சங்கத்திற்கு தினந்தோறும் வழங்க வேண்டும்.
மேலும் எமது பொதுச் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நுகர்வோர்களும், பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களும் முகக் கவசம் அணிய வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போன்ற விடயங்கள் தீர்மானங்களாக எடுக்கப்பட்டது.
எனவே வர்த்தகர்கள், நுகர்வோர்கள் சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும், சமூக இடைவெளிகளை பேணி,முகக் கவசம் அணிந்து இக் கொடிய நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும், ஊர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக்கப் பட்டுள்ளது என்பதனை கருத்தில் கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்படி கலந்துரையாடலில் கல்முனை தெற்கு சுகாதார அதிகாரி டாக்டர் எம்.ஐ ரிஸ்னி, கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.அர்சத் காரியப்பர், கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் மற்றும் எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் ,பொருளாளர் ஐ.எல்.எம்.யூசுப் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் களும் கலந்து கொண்டனர்.
No comments