மருதூர் ஏ.மஜீதின் மறைவு கல்வி, சமூக, இலக்கியத் துறைகளுக்கு பேரிழப்பாகும்; கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் மூத்த இலக்கியவாதியுமான மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்களின் மறைவு கல்வி, சமூக, இலக்கியத் துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்கள் நாடறிந்த எழுத்தாளராவார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இலக்கிய வாசம் பரப்பி, தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்தை பெற்றிருந்தார். கலை, இலக்கியம், கல்வி, சமூகம் சார்ந்த பல நூல்களை எழுதி வெளியிட்ட பன்னூலாசிரியரான மணிப்புலவர், நாடு முழுவதும் நிறைய இளம் படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறார்.
கிழக்கிலங்கையின் கலை, இலக்கிய முதுசொமாகத் திகழ்ந்த இவர் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகி, அனைவரையும் வசீகரிக்கின்ற ஆற்றலை பெற்றிருந்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானும் மணிப்புலவர் அவர்களும் ஈரான் நாட்டுக்கு ஒன்றாக விஜயம் செய்து, அங்கு தங்கியிருந்த காலம் தொட்டு எம்மிருவருக்குமிடையிலான உறவு மிகவும் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து ஊர், சமூக விடயங்கள் பற்றிப் பேசிக்கொள்வோம். அவருடனான உறவு என்பது மிகவும் கலாதியானதும் கனதியானதுமாகும்.
சமீபத்தில் கூட அவரது வீடு சென்று, அவரை சந்தித்தபோது, சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அவர் என்னுடன் கருத்துகளை பரிமாறிக் கொண்டமையும் அவரது ஹாஷ்யமான உரையாடலும் பசுமை நினைவாக இருக்கிறது. இந்நிலையில் அவரது மறைவு எனக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
No comments