Breaking News

சர்வாதிகாரத்திற்கு அடிபணியும்படி அல்-குர்ஆன் கூறுகிறதா ? எமக்காக குரல்கொடுத்த தமிழ் எம்பிக்களை ஏன் விமர்சிகின்றனர் ?

பாலஸ்தீனர்களின் புனித போராட்டத்தை பணத்திற்கும், பதவிக்குமாக ஒருசில பாலஸ்தீனர்களே யூதர்களிடம் காட்டிக்கொடுக்கின்றார்கள். ஆனால் இங்கே புனிதமும் இல்லை, போராட்டமும் இல்லை. இவ்வாறான நிலையில் தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல.

நாட்டுச் சட்டத்திற்கு அடிபனியுமாறு அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சட்டமும், இஸ்லாமிய சட்டமும் முரண்பாடான நிலையில் இருந்தால் நாங்கள் எதனை பின்பற்றுவது ? இதற்கு உலமாக்கள் பதில் வழங்குவதுதான் பொருத்தமானது. ஆனால் எம்மிடம் அவ்வாறான உலமாக்கள் இல்லை.

எவ்வாறான நாட்டின் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட வேண்டுமென்றும், எந்த சூழ்நிலையில் என்றும் தெரிவிக்கவில்லை. அதாவது முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி நிலவுகின்ற ஒரு நாட்டின் சட்டத்திற்கு அடிபனியுமாறு அல்-குர்ஆனில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது ?

“புனிதமான நோக்கமில்லாமல் தேசப்பற்று அல்லது இனவெறியோடு இஸ்லாமியக் கொடியின் கீழ் அல்லது அதற்கும் மேலாக நபியவர்களின் படையில் இருந்துகொண்டு போரிட்டாலும் அவர் செல்லுமிடம் நரகம்” என்று ரசூலுல்லாஹ் அவர்கள் உஹது யுத்தம் முடிவுற்றநிலையில் உஹது களத்தில் வைத்து கூறியுள்ளார்கள்.

மார்க்கம் இவ்வாறு தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், யாரோ பேரினவாதிகள் சிலரை திருப்திப்படுத்தும் நோக்கில் அல்-குர்ஆன் வசனங்களுக்கு பிழையான வியாக்கியானம் கூறி தேசப்பற்று என்றபோர்வையில் அடிமையாக வாழவேண்டுமென்று எம்மவர்களே எங்களுக்கு உபதேசம் கூறுவதன் மூலம் அவர்கள் “முஸ்லிம் பெயர் தாங்கிகள்” என்பதனை நிரூபிக்கின்றனர்.

இந்த நாட்டில் விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதன் பின்பு அதாவது 2010 இல் இருந்து தென்னிலங்கை அரசியல் சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்காக முஸ்லிம்கள் பந்தாடப்பட்டு வருகின்றார்கள்.

அத்துடன் நாங்கள் பலயீனமான நிலையில் இருந்துகொண்டு உரிமைக்காகவும், நீதியை நிலைநிறுத்த போராட்டம் நடாத்தினால் அதில் வெற்றிபெற முடியாது. பலயீனமானவர்கள் என்பதற்காக அடிமையாக வாழவும் முடியாது. மாறாக எங்களை பலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதனை வழிநடாத்துவது யார் ?

இவைகள் ஒருபுறமிருக்க, ஜனாசாக்கள் எரிக்கப்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் வாய்மூடி மௌனியாகவும், அரசாங்கத்துடன் பின்கதவினால் கள்ள உறவுகளை பேணிவருகின்றனர்.

இந்த காலகட்டத்தில், எமது மக்கள்மீது பரிதாபப்பட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணாக்கியன், மனோகணேசன் போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களுக்காக பாராளுமனறத்தில் குரல் எழுப்பியதுடன், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தமிழ் எம்பிக்களது இந்த செயல்பாடுகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வரவேற்றதுடன் அது ஓர் ஆறுதல் தருகின்ற விடயமாகவும் பார்க்கப்பட்டது.  

முஸ்லிம்களுக்காக தமிழ் எம்பிக்கள் குரல் கொடுத்ததனை தென்னிலங்கை இனவாதிகளினால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனால் இவ்வாறு முஸ்லிம்களுக்காக ஓங்கி ஒலிக்கின்ற குரல்களை நசுக்கும் நோக்கில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எம்மவர்கள் சிலரினால் வசைபாடப்படுவதானது தமிழ் எம்பிக்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதனை தடுக்கும் பேரினவாதிகளின் சூழ்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது





No comments

note