நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யவும் - மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்
நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே
தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை (9) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் இறப்பதாக காரணம் காட்டி, மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையினால், அதற்கு தீர்வு காண்;பதற்காக நாங்கள் தொடர்ச்சியாக அந்த விவகாரத்தைக் கவனத்திற்கு கொண்டுவந்த வண்ணமே இருக்கின்றோம்.
பிரதமரின் அலுவலகமும் ஓர் அறிக்கையை விடுத்திருப்பது தெரியும். ஆனால், நாங்கள் இவ்விடயம் தொடர்பில் இப்பொழுது நம்பிக்கை இழந்து வருகின்றோம்.
இந்த விடயம் தீர்த்து வைக்கப்படாததனால், சமூகம் அதற்கு வேறு வகையில் முகம் கொடுக்க முன்வந்திருக்கின்றது. அவ்வாறான ஜனாஸாக்களை பொறுப்பேற்பதில்லை என்ற முடிவுக்கு சமூகத்தினர் வந்துவிட்டனர்.
இது முழுச் சமூகத்திற்குமே மிகவும் பாரதூரமான விடயமாக மாறிவிட்டது.
அதனால் விளைந்துள்ள மனத் தாக்கம் ஒருபுறம் இருக்க, சர்வதேச மட்டத்திலும் இந்நாட்டிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்த விடயத்தினால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
அத்துடன், அடுத்த பரம்பரையினரில் கூட இதன் பின் விளைவு இருந்து வரும்.
ஆகையால், அரசாங்கத்தின் எரியூட்டுகின்ற இந்தக் கொள்கையை மீள் பரிசீலனை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
உங்கள் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், மருத்துவ நிபுணர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூட இதுபற்றி தீர்மானம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவைக் கண்டிக்கின்றார்.
அவர் வைரஸ் நோய் தொற்று நிபுணர் மட்டுமல்லர். பக்டீரியா, கிருமித் தாக்கம் பற்றியும் கற்றுத் தேர்ந்தவர்.
அவர் பிரித்தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் உயர் பட்டங்களும், விருதுகளும் பெற்றவர். இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிந்தவர். அவர் இதில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வைரஸ் நோய் நிபுணர்கள் இல்லையென்றும், இது பற்றிய சகல விதமான விடயங்களையும் போதியளவு தெரிந்தவர்கள் இல்லையென்றும், உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இல்லையென்றும் அதில் நிபுணரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக் காட்டுகின்றார். அவர், இந்தத் துறையில் தகுதி வாய்ந்த பலர் இருக்கின்றோம். ஆனால், எவருமே இது சம்பந்தமான கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை என்கின்றார்.
தங்களை நிபுணர்கள் எனக் கூறிக் கொள்ளும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் யார்? விஞ்ஞானபூர்வமாக முற்றிலும் சரியானவை என உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றையும், நிரூபிக்கப்பட்டவற்றையும் மறுப்பதற்கு இவர்கள் யார்?
விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகளை மறுப்பவர்கள் அவர்களுக்கேயுரிய ஒரு வித்தியாசமான உலகில் சஞ்சரிக்கின்றார்கள்.
அத்தகையவர்கள் தான் ஒரு சமூகத்தின் உணர்வுகளை வெகுவாக பாதிக்கின்ற எரிக்கின்ற விடயத்தில் எரிப்பதே ஒரே தீர்வு எனச் சொல்கின்றனர்.
டாக்;டர் பபா பலிஹவடன என்ற பிரபல தொற்றுவியல் நிபுணர் நல்லடக்கம் செய்ய முடியும் என்று கூறியிருக்கின்றார்.
டாக்டர் நிஹால் அபேசிங்ஹ என்ற மற்றுமொரு சிரேஷ்ட தொற்றுவியல் நிபுணரும் இவ்வாறான சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்றும், அதனை உலகம் சுகாதார நிறுவனம் அனுமதித்திருப்பதாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூடத் தோன்றி தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
இவ்வாறான தகைமை வாய்ந்த தொற்று நோய் நிபுணர்கள் வெளியில் இருக்க, தங்களை நிபுணர்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டு மாய உலகொன்றில் உலவுபவர்களே அக்குழுவில் இடம்பெற்று பாதகமான முடிவை எடுக்கின்றனர்.
அவர்களை அகற்றிவிட்டு, தகுதியான நிபுணர்களை இக்குழுவுக்கு நியமியுங்கள். எரிப்பு மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வுச் செய்யுங்கள் என இறைவனுக்காக மீண்டும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறே மீண்டும் ஆதரவாக வாக்களித்து சமூகத்தை மேலும் அவமானம்படுத்திவிடக் கூடாது என்றார்.
No comments