மாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : ஜனாஸாக்கள் ஆபத்தில் - கள விஜயம் செய்தார் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஷன்
அபு ஹின்ஸா
கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாகி சில பகுதிகளை தவிர முழுமையாக இடிந்து வீழ்த்ததுடன் தற்காலிய தீர்வாக பிரதேச மக்களால் இடப்பட்ட மண் மூடைகளும் கடல் அலைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் சேதமாகி கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் பலரும் நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தும் இதுவரையிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். கரையோரம் பேணல் திணைக்கள உயரதிகாரிகள், இது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்க ஆரம்ப கட்டத்தை முன்னெடுத்தும் அது இன்னும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை எனவும் பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்படி மதில் இடிந்து விழுந்ததால் ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகும் நிலை உருவாகியுள்ளது. மனித எச்சங்களும், ஜனாஸாக்களும் கடலில் மிதக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இம்மையவாடியின் நிலை தொடர்பில் ஆராய அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலத்தாரி ஏ.எம். அலியார் உட்பட பலரும் களத்திற்கு விஜயம் செய்து நிலைகளை ஆராய்ந்ததுடன் அனர்த்த முகாமைத்துவ நிதிகளை கொண்டு அவசரமாக கடலரிப்பை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச சபையூடாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.
No comments