இலங்கையிலேயே நல்லடக்கம் செய்யப்படும் உரிமையை அரசாங்கம் மறுக்க முடியாது - மாலைதீவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு
கொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம்.
இவ்வாறு இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். அதனை அவர் தமது டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளதோடு, மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீதிற்கும் அவர் அதனை மீள்பதிவேற்றம் செய்துள்ளார்.
இங்குள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலின் தமிழாக்கம் வருமாறு,
மேன்மை தங்கிய உயர்ஸ்தானிகருக்கு,
தங்களோடு கடைசியாகக் கதைத்து சில காலம் ஆகிவிட்டது. இன்றைய “டெய்லி மிரர்” பத்திரிகையில் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்போரை நல்லடக்கம் செய்வதற்கு மாலைதீவு முன்வந்திருப்பது குறித்த செய்தியை வாசித்த பின்னர், தங்களுக்கு இக்கடிதத்தை எழுதத் தோன்றியது.
சந்தேகத்திற்கு இடமின்றி, கொவிட் - 19 இனால் இறப்பவர்களை எரிப்பது மட்டுமே என்ற அரசாங்கத்தின் ஓரே கொள்கையின் விளைவாக இந்நாட்டு முஸ்லிம் சமூகம் பாரதூரமான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில், எமது சமூகத்தின் மீது தங்கள் நாட்டு அரசாங்கத்திற்குள்ள அனுதாப உணர்வு தாராள சிந்தையின் வெளிப்பாடாகும். அதனால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டு ஜனாதிபதி சொஹ்லி அவர்களுக்கும், மாலைதீவு குடியரசு மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியறிதலைக் கூறிக் கொள்கின்றோம்.
ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தங்கள் நாட்டின் சபாநாயகர் நஷீட் மற்றும் அவரது பாராளுமன்ற சகாக்களுடனும் ஏனைய பலருடனும் நட்புறவை பேணி வருபவன் என்ற விதத்திலும் இந்நாட்டு முஸ்லிம்களை ஆறுதல்படுத்த மேற்கொள்ளும் எத்தனத்தையிட்டு பாராட்டு தெரிவிப்பது எனது கடமையாகும்.
எவ்வாறாயினும், தொற்று நோயியல் விஞ்ஞான ஆதாரங்களையும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனெஸ்கோ நிறுவனம் ஆகியவற்றின் கொவிட் - 19 சடலங்கள் எவ்வாறு இறுதிக்கிரியை செய்யப்பட வேண்டுமென்ற வழிகாட்டுதல்களையும் புறக்கணித்துவிட்டு, நீதி நியாயமற்ற முறையில் எமது அரசாங்கம் நடந்துகொள்வதை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி வருகின்றோம் என்பதை மிகவும் கவலையோடு தெரிவித்துக் கொள்ள நேர்ந்திருக்கின்றது.
அதைவிட, எங்களது அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட சமத்துவமான அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாகவும் அது அமைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் எரியூட்டுவதற்கான கட்டணத்தைச் செலுத்தவோ, ஜனாசாக்களை பொறுப்பேற்கவோ முன்வராமல் சமூகத் தலைவர்களாலும், அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அழைப்பை ஏற்று, சமூக ரீதியாக அதற்கு முகம் கொடுக்க துணிந்து நிற்பதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
சகிப்புத் தன்மை மற்றும் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் மத நம்பிக்கைகளின் பெறுமதிக்கு மதிப்பளிக்க வேண்டிய இந்நாட்டில் முஸ்லிம்களான எங்களை அச்சுறுத்தி, ஓரங்கட்ட எத்தனித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், அத்தகைய தீய சக்திகளுக்கு இரையாகிவிடாமலும், தேசத்தை துருவப்படுத்தலுக்கு உள்ளாக்கிவிடாமலும், பாதுகாப்பதற்கு நாம் திடவுறுதி பூண்டுள்ளோம்.
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும், தங்களது நாட்டிற்கும் அருள்பாலிக்க வேண்டும் என பிரார்த்திக்கும் அதேவேளையில், நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதைச் சாதகமாகப் பயன்படுத்தி, நாங்கள் நேசிக்கும் எமது நாட்டில் வாழ்ந்து, மரணித்த பின்னர் இங்கேயே கண்ணியமாக நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எல்லா விதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
ரவூப் ஹக்கீம், பா.உ,
தலைவர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
No comments