கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத்திட்டம் 9 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கல்முனை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீபினால் இன்று (02.12.2020) மக்கள் பிரதிநிதிகளின் அங்கீகாரத்திற்காக சபை அமர்வின் போது வாசித்து சமர்ப்பிக்கப்பட்டது.
இப்பாதீடு அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அதிகபட்சமான உறுபினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வரவு-செலவுத்திட்டத்திற்கு வெளிப்படையான ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள்,என 24 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இப்பாதீட்டுக்கெதிராக தமிழ் கூட்டமைப்பு உறுப்பினரான எஸ்.ராஜன்,மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சப்றாஸ் மன்சூர்,மற்றும் சாய்ந்தமருது தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களாக 15 பேர் எதிராக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைகளால் அரசாங்கத்தின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதைப்போல் இம் மாநகர சபைக்கான வருமான மூலங்களும் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளன.
கட்சி வேறுபாடுகளுக்கப்பால் இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இம் மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான இப்பாதீட்டிற்கு தமது மேலான ஆதரவினை வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் கல்முனை முதல்வர் என்ற ரீதியில் இவ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இவ் மாநகர மக்கள் சார்பாகவும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
No comments