இன்று (26) கொடுமையாக எரிக்கப்பட்ட பெண்ணின் மகன் கதறல்..
நான் “முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14”
எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.
எமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. எனவே, கொழும்பு தேசிய வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம். மறுநாள் 04ஆம் திகதி காலையில் அவரைப் பார்க்க சென்ற வேளையில், அவருக்கு கொரோணா தொற்றிருந்ததாகக் கூறி அவரை ஹோமகம வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியுள்ளதாக கூறினர்.
டிசம்பர் 16ஆம் திகதி வரை அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நாட்களில் அவரைப் பார்க்க எமக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அதே வேளை 15.12.2020 அன்று காலை 10.30 மணியளவில் எமது தாயார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் ஆஸ்பத்திரியிலிருந்து தன்னை discharge பண்ணியுள்ளதாகவும் மேலும், அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க அன்றைய தினத்தில் அம்பியுலன்ஸ் வாகனமொன்று இல்லாத காரணத்தால் மறுநாள் காலை அனுப்பி வைப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தன்னிடம் கூறியதாகவும் அறிவித்தார். இன்ஷா அல்லாஹ் நாளை வீட்டுக்கு வருவேன் என்றும் கூறினார்.
அந்நேரம் கூட எமது தாயாருக்கு பெரிய அளவில் எந்த அசௌகரியமும் இருப்பதாக எங்களுக்கு விளங்கவில்லை. உம்மா வீட்டுக்கு வரப்போகும் பெரும் சந்தோஷத்தில் நாங்கள் காத்திருந்தோம் . ஆனால் மறுநாளான (16.12. 2020) அன்றும் உம்மாவை அவர்கள் அழைத்து வரவில்லை அன்று இரவாகியும் அவர்களுக்கு அம்பியுலன்ஸ் கிடைக்கவில்லையென்றே எம்மிடம் தெரிவித்தனர்.
தனது மகனின் வாகனத்தை வரவழைத்து அதில் வீட்டுக்கு போக அனுமதி கேட்டபோது கிரேன்ட்பாஸ் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்பதால், அவர்களே எம்பியுலன்ஸில் அழைத்து வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் வீட்டுக்கு வர ஆவலுடன் காத்திருந்த உம்மா கொஞ்சம் பதட்டத்துடனே இருந்திருக்கின்றார். அடிக்கடி தொலைபேசியில் கதைத்தார். மறு நாள் காலையில் வரலாமென நாம் அவருக்கு ஆறுதல் சொன்னோம்.
ஆனால் அடுத்த நாள் 17. 12. 2020 அதிகாலை 4.00 நான்கு மணியளவில் எமது தாயார் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த செய்தி எம் காதுகளை இடியாய் தாக்கியது.
கொரொணா positive ஆன நிலையில் நோய் அறிகுறிகள் எதுவுமில்லாமல் 12 நாட்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்ற நிலையில் குறித்த நோயாளிகளின் உடலிலிருந்து ஏனையோருக்கு கிருமி தொற்றாது என்கின்ற, இலங்கை சுகாதாரத் துறையின் புதிய நிலைப்பாட்டிற்கமையவே எமது தாயார் Discharge செய்யப் பட்டதாகவும் அவருடைய மரணத்திற்கான காரணத்தை தம்மால் கூட ஊகிக்க முடியாதுள்ளது என்று ஹோமாகம JMO எம்மிடம் தெரிவித்தார்.
ஆகவே ஹோமகம ஆஸ்பத்திரியின் JMO மற்றும் மரணபரிசோதகரின் பணிப்புரைக்கமைய அங்கிருந்து எமது தாயாரின் உடல் மரண பரிசோதனைக்காக (postmortem) கலுபோவிலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அங்கு முதலில் PCR பரிசோதனையே செய்யப்பட்டது. Results Positive என வந்த காரணத்தால் கொரோணா மரணங்களை மரண பரிசோதனை செய்யமுடியாது என கூறிவிட்டார்கள்.
பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்த ஒரு நோயாளி மரணத்துக்கு பின் எவ்வாறு positive ஆனார்.
அதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்ட மரண பரிசோதனையின் காரணமாக எமது தாயின் மரணத்துக்கான காரணத்த்தை கண்டறிய வழியில்லாத நிலையில்; இவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் இருப்பதாக கூறி எமது தாயின் உடல் தகனம் செய்யப்படுவதை நாம் ஆட்சேபித்தோம். மீண்டும் ஒரு PCR செய்யும்படி கோரி கலுபோவிலை JMO விடம் (21. 12. 2020) அன்று எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை அவர்கள் கணக்கிலும் எடுக்கவில்லை.
தொடர்ந்தும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில், கொரோணாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் சம்பந்தமாக ஒரு தீர்மானம் வரும்வரை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பாதுகாத்து வைக்கும் அரசாங்க, சுகாதாரத்துறையின் பணிப்பாளர் நாயகத்தினால் 16. 12. 2020 அன்று நீதியமைச்சருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய எமது தாயாரின் உடலையும் பாதுகாத்து வைக்குமாறு மீண்டும் கலுபோவிலை JMO உட்பட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல ஜயவர்தன போன்றோருக்கும் சட்டத்தரணியொருவர் மூலம் 23.12.2020 அன்று எழுத்துமூல வேண்டுகோளொன்றை விடுத்தோம்.
என்றாலும் கலுபோவிலை ஆஸ்பத்திரியிலிருந்து, கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொள்கலன்களுக்கு உடல்களை அனுப்புவது சம்பந்தமாக எந்த வழிகாட்டல்களும் தமக்கு வழங்கப்படவில்லை என்ற பதில் தான் அவர்களிடமிருந்து கிடைத்தது.
அப்போ இந்த குளிரூட்டி விடயம் வெறும் கண்துடைப்பா?
இறுதியாக, இன்று (26.12.2020) பத்து நாட்கள் கடந்த நிலையில் எமது அன்புக்கும் பாசத்திற்குமுரிய தாயாரின் ஜனாஸாவை முற்பகல் 11.15 மணியளவில் கொஹுவலை பொது மயானத்தில் எமது அனுமதியின்றியே சாம்பலாக்கிவிட்டார்கள். நாங்கள் கையாலாகதவர்களாக கையை பிசைந்துகொண்டு வானத்தை நோக்கி கைகளை உயர்த்துவதை தவிர வேறு வழியின்றி பித்துப் பிடித்தவர்களாய் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எமது தாயாருக்கு விபத்து நடந்தபோது அவரைத்தொட்டு தூக்கி உதவிய அயலவர்கள், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றவர்கள், உட்பட அவர் மரணித்த பிறகு சுகாதார அதிகாரிகளால் எமது வீட்டில் செய்யப்பட்ட PCR பரிசோதனைகளில் கூட எவருக்கும் கொரோணா தொற்றில்லை என்றே நிரூபணமாகியுள்ளது.
*வெறுமனே இதை வாசித்து விட்டு கடந்து போகாதீர்கள்.*
*நாளை இந்த அநீதம் உங்கள் வீட்டுக்கதவுகளையும் தட்டும்.*
கொரோணாவினால் உயிரிழந்ததாக சொல்லப்படும் ஒவ்வொரு ஜனாஸாவின் பின்னாலும் இப்படியான அநீதங்களே மறைந்திருக்கும்.
அவற்றை ஒவ்வொன்றாகத் தேடி எழுதி ஆவணப்படுத்துங்கள்.
இந்த அநீதியிலிருந்து மீள முஸ்லிம் சமூகம் ஒன்று படவேண்டும்.
இந்த செய்தியை உலகம்பூராவும் share பண்ணுங்கள்.
தகவல் மகன் 😗
எம். ஆர். எம். இஹ்ஸான்
No comments