கொரோனா ஜனாஸாக்கள் சம்பந்தமாக ஆராய அரச ஆதரவு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொண்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றை கூட்டி பிரதமர் ஆலோசிக்க வேண்டும்.
நூருல் ஹுதா உமர்
கொரோனா மரணங்கள் சம்பந்தமாக ஆராயும் அரச ஆதரவு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொண்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றை பிரதமர் நேரடியாக அல்லது ஒன்லைனில் கூட்டி ஆலோசிக்க வேண்டும். அதில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அல்லது சந்தேகத்தின் பேரில் காலமான முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்க எவ்வாறு அனுமதித்தல், எங்கே, எப்படி, யார் அடக்கம் செய்தல் போன்றவற்றை ஆலோசனை செய்ய வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சுமூகமற்ற நிலைகள் தொடர்பில் ஆராயும் வகையில் அவரது கல்முனை காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கொரோனாவின் முதல் அலையின் போது பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்ட நிலையில் சில கொரோனா தொற்றுக்கு இலக்காகி அல்லது சந்தேகத்தின் பேரில் காலமான முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது முஸ்லிம்கள் மிகவும் கவலைப்பட்டனர். ஆனாலும் எரிக்காமல் நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதிக்க நினைத்த போதும் அதை சில முஸ்லிம் எதிர்க்கட்சிகள் அரசியல் நன்மையாக்க முனைந்ததால் அரசு சம்மதிக்கவில்லை.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி அல்லது சந்தேகத்தின் பேரில் காலமான முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்த விடயத்தில் இந்த அரசாங்கம் அரசியல் செய்யவில்லை என்பது உண்மை. ஆனாலும் இதனை அரசியலாக்கி முஸ்லிம்களை தமக்கு நெருக்கமாக்குவதற்கும் இந்த அரசு தவறி விட்டது.
அந்த நேரத்தில் உலமா கட்சித்தலைவராகிய நான் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பினேன். அதில் தேர்தல் காலம் என்பதால் ஜனாஸா எரித்தலை வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அரசியல் செய்வதால் இதனை நிறுத்தும் வகையில் ஜனாஸா எரித்தல் சட்டத்தை மாற்றும்படியும் இம்மாற்றம் பற்றி அறிவிக்குமுன் பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் தலைவர்கள், பெரமுன ஆதரவு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இவ்வறிவித்தலை விடுப்பதாக பகிரங்கமாக அரசு சொன்னால் இது எதிர்க்கட்சிகளுக்கு தோல்வியாகவும் பெரமுனவின் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் பெரமுன ஆதரவு முஸ்லிம்கள் விரும்பும் சிங்கள வேட்பாளர்களுக்கும் சாதகமாக அமையும் என அக்கடிதத்தில் சொல்லப்பட்டது.
ஆனாலும் அரசு இந்த ஆலோசனையை செவிசாய்க்கவில்லை. அரசுடன் இருந்த முஸ்லிம் தலைவர்களும் , அரச ஆதரவு முஸ்லிம் கட்சிகளும் இது விடயத்தில் ஒன்று பட்டு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க எந்த ஏற்பாடும் செய்து தரவில்லை. இதன் விளைவு தேர்தல் முடிவில் தெரிந்தது. ஆனாலும் இத்தகைய ஜனாஸா எரிப்பு சூழலிலும் பொது தேர்தலில் பெரமுனவுக்கும் அதன் ஆதரவு முஸ்லிம் கட்சிகளுக்கும் சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாக்களித்தமை என்பது வரலாற்று சாதனையாகும்.
இப்போதும் இது விடயத்தை கௌரவ நீதி அமைச்சர் அமைச்சரவைக்கு முன் வைத்த போது இதனை அனுமதித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இன்னொரு வாரத்துக்கு தள்ளிப்போட்டதால் எப்படியும் இச்சட்டம் வாபஸ் பெறப்படத்தான் போகிறது என புரிந்த எதிர்க்கட்சிகள் தங்களால்த்தான் இது நடக்கப்போகிறது என்பதை காட்டுவதற்காக பாராளுமன்றத்தில் பேசியுள்ளனர்.
இதில் உள்ள உண்மை பலருக்கு தெரியும் என்றிருந்த போதும் பாமர மக்கள், எதிரணி சார்பு மக்கள் எதிர்க்கட்சியினால் தான் இந்த நன்மை கிடைக்க போகிறது என்றுதான் நினைப்பார்கள். ஆகவே இது சம்பந்தமாக ஆராயும் அரச ஆதரவு முஸ்லிம் அரசியல்வாதிகளைக்கொண்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றை பிரதமர் நேரடியாக அல்லது ஒன்லைனில் கூட்டி ஆலோசிக்க வேண்டும். அதில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அல்லது சந்தேகத்தின் பேரில் காலமான முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்க எவ்வாறு அனுமதித்தல், எங்கே, எப்படி, யார் அடக்கம் செய்தல் போன்றவற்றை ஆலோசனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
No comments