எமக்கு உடல்கள் தான் வேண்டும் சாம்பல் அல்ல - அபூ ஸுமையா
எமக்கு உடல்கள் தான் வேண்டும் சாம்பல் அல்ல. எம் உடல்களை உயிருடன் எரிப்பதும் சடலமாக எரிப்பதும் எமக்கு ஒன்றே. எம் உணர்வுகளுக்கு மதிப்பளி அரசே! நாமும் இந்நாட்டின் மைந்தர்கள்.
உணர்வுகள் அற்ற சடலங்கள் எத்தனையோ நடமாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு மதமும் இல்லை நம்பிக்கையும் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நாடகம் ஒன்றே. அவர்களது நாடகத்தில் ஏமாந்து விடாதே அரசே! இன்று உன்னுடன் தலையாட்டும் அவர்கள் நாளை உனக்கு எதிராக இன்னொருவருடன் தலை ஆட்டுவார்கள்.
அச்சத்தை ஆடையாக அணிந்த பதவி மோகம் கொண்டவர்களோ சாம்பல் கிடைத்தால் போதும் என்று நிற்கின்றனர். உணர்வுள்ள மக்களோ கதறி அழுகின்றனர். சமூகத்தின் எதார்த்தத்தை கண்விழித்து பார் அரசே!
நான்கு சுவர்களுக்குள் முடங்கி, கௌரவமான ஆடைகளுக்குள் ஒளிந்து, உலக மோகம் பிடித்த நாற்காலியில் அமர்ந்து, மக்கள் உணர்வை மறந்து, நாம்தான் சமூகத்தின் தலைமை என்று கூறி! சாம்பலேனும் தாருங்கள் என்று கேட்டு விட்டார்கள் என்பதற்காக மக்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டு விட்டார்களா அரசே! இல்லை அல்லவா! ஏன் தெரியுமா அரசே! நாம்தான் தலைமை என்று அவர்கள் தான் கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்களல்ல. இது மக்களாட்சி அரசே! மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடு.
ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை, மத உரிமை, மனித உரிமை, என்ற அறிவுகளுக்குள் தீர்வைத் தேட முனைகின்றோம். புரிந்துகொள். தீர்வு கொடு.
எங்களுக்காக இல்லாவிட்டாலும் நாம் விட்டுச் செல்கின்ற சந்ததிகளுக்காகவேனும் எமது நாட்டுக்கு நல்ல வரலாறை விட்டுச் செல்ல வேண்டியது எமது தார்மீகக் கடமை என்பதை உணர்ந்திருக்கிறோம். உரிமைகளை பரித்து அவற்றை நாசம் செய்யாதே.
இவை எழுத்துக்கள் அல்ல. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் பல செய்த ஒரு சமுதாயத்தின் கண்ணீர் துளிகள். பாதிக்கப்பட்டோரது கண்ணீர் துளிகளும், உள்ளத்தில் இருந்து புறப்படும் சாபமும் குற்றவாளிகளை நிம்மதியாக வாழ வைத்ததாக சரித்திரம் இல்லை என்பதை புரிந்து கொள்.
கொரோனா இலங்கைக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம் அல்லவே. உலகில் எட்டு திசைகளுக்கும் கிடைக்கப்பெற்ற இக்காலத்தின் சோதனை அது. அங்கெல்லாம் இறந்த உடல்களுக்கு மதிப்பளித்து மத உரிமை, மனித உரிமை, மனிதாபிமானம் பேணி இறுதிச்சடங்கு செய்யப்படுகின்றது. இங்கு மட்டும் சடலங்களின் மீது அரசியல் செய்யப்பட்டு எம் உடல்கள் எரிக்கப்படுகின்றனவே. வரலாற்றில் சிங்கள மன்னர்களிடம் காணப்பட்ட வீரமும் மனிதாபிமானமும் விற்பனை செய்யப்பட்டு விட்டதா?
நிற்கதியற்று நின்றாலும் இன்னும் உன் மீது நம்பிக்கை வைத்து உன்னிடம் கேட்கிறோம் அரசே. ஓலமிடும் ஒரு சிறுபான்மையின் அபயக்குரல் உன் காதில் ஏறாமல் போய்விட்டால், சாபங்கள் நிச்சயம் உன்னை வந்தடையும். சாபங்களின் சக்திகள் நிச்சயம் உன் நிம்மதியையும் சுட்டெரிக்கும். பாதிக்கப்பட்டோரது பிரார்த்தனைகளையும் சாபங்களையும் அஞ்சிக்கொள். ஏனெனில் அவை மகா சக்தி வாய்ந்தவை.
கண்ணீருடன்
அபூ ஸுமையா
07/11/2020
No comments