Breaking News

உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் இனவாத நோக்கில் எதிர்ப்பு வெளியிடப்படுகிறது! -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்

தகனம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை, இரத்துச் செய்து விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளவேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய மாத்திரம் எடுத்துள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச இஸ்லாமிய அமைப்பு என பல அமைப்புகள் இது தொடர்பில் கோரியிருந்தன.

அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம் இரு முறைகளுக்கும் அனுமதி அளித்திருந்தது. இது அடிப்படை மனித உரிமை மீறப்படுவது மாத்திரமின்றி இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது. இத்துடன் இனவாத நோக்கில் இதற்கு எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. இறந்தவர்களின் உரிமையைப் பேண வேண்டும். பல்வேறு பிசாசுகளை உருவாக்கி அச்சம் ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்து விஞ்ஞானபூர்வமான முடிவு எடுக்குமாறு தாழ்மையாக கோருகிறோம்.

மேலும் நீர் ஊடாக கொரோனா பரவாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியுள்ளது. பல்வேறு சர்வேச அமைப்புகளும் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அதனால் ஒரு இனத்தின் மத கலாசாரத்தை பாதுகாப்பது முக்கியமான விடயமாகும்.அதனால் தகனம் மாத்திரம் அனுமதித்து வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்து, விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளவேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்).





No comments

note