ஜனாஸா எரிப்புக்கெதிராக அலி ஸாஹிர் மௌலானா உச்ச நீதிமன்றில் தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் விசாரணை மீண்டும் நாளை....
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை மாலை வரை இடம்பெற்று , அதன் தொடர்ச்சியாக மீண்டும் நாளை இடம்பெற உள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முருது பெர்னாண்டோ, பத்மன் சுரஷேன ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் இன்று விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மீண்டும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டு விசாரணகள் தொடர உள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா உட்பட மேலும் சிலரால் கடந்த மே மாதம் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளது விசாரணைகளே இன்று இடம்பெற்றது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா மற்றும் விரான் கொரயா உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர் ஆகியோர் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
குறித்த மனுக்களை ஆட்சேபித்து கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயரத்ன ஆஜராகியதுடன் பிரதிவாதியான சுகாதார அமைச்சர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில்புள்ளே ஆஜராகி இருந்தார்..
நீண்ட வாதப் பிரதிவாதங்களை அடுத்து மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமையும் விவாதங்கள் இடம்பெற உள்ளன..
சாதகமான சூழல் நிலவும் இத்தருணத்தில் மேலும் வலுப்பெற்று எமக்கான நீதி கிடைக்க அனைவரும் பிரார்த்திப்போம்...
No comments