Breaking News

மின்குமிழ்களை காரணம் காட்டி மக்கள் பணத்தை சுருட்டும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் - மாநகர சபை உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு.

அபு ஹின்ஸா

கல்முனை மாநகர சபை என்பது திரும்பும் திசைகள் எல்லாம் ஊழல் நிரம்பியதாகவே இருக்கிறது. கல்முனை மாநகர குப்பைகளை துப்பரவு செய்ய முன்னர் கல்முனை மாநகர சபை ஊழல்களை துப்பரவு செய்ய வேண்டும். இல்லாது போனால் இப்போது இருக்கும் நிலையை விட பலமடங்கு கல்முனை மாநகரம் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும். அண்மையில் மின்குமிழ் வாங்கியது முதல் அத்தனையிலும் உச்சகட்ட ஊழல் நடந்துள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப் தெரிவித்தார். 

புதன்கிழமை நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அங்கு பேசிய அவர். 

கல்முனை மாநகர சபைக்குரிய பொருள் கொள்வனவு செய்வதில் இல்லையென்ற கொள்ளைகள் நடக்கிறது. முறையான கேள்விமனுக்கள் இல்லை. சேவைவழங்குநர்களின் பட்டியலில் முறைகேடு, சிலரின் வயிற்றை நிரப்ப முடியாது என்பதனால் அடாத்தாக பெறுகை குழுவையும் கலைத்துள்ளார்கள். மின்குமிழ் கொள்வனவு செய்ததில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த மாநகர சபை ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது. இவ்விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு இவ்விடயங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நிதிக்குழு கூட்ட வரைவில் 18 வாட்ஸ் மின்குமிழ்கள் 1000 ஐ 440 ரூபாய் வீதம் 440,000 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய அனுமதி கோரிவிட்டு இரண்டு தினங்ககளின் பின்னர் அதாவது  கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற கூட்ட அறிக்கையில் கடந்த பெப்ரவரி மாதமே கொள்வனவு செய்து அதை மாநகர பாவனைக்கு அனுப்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள். 

சந்தையில் 2 வருட உத்தரவாதத்துடன் அந்தவகை மின்குமிழ்களின் சந்தைப் பெறுமதி கிட்டத்தட்ட 270 ரூபாய் மட்டுமே. இதனை சாதாரண பொதுமக்களே அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் மக்கள் பணம் சுமார் 165,000 ரூபாயை சுருட்டியுள்ளார்கள். இது போன்ற பல ஊழல்கள் இந்த மாநகர சபையில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. என்றார்.



No comments

note