அமைச்சுக்களுக்காக மட்டும் அள்ளி விழுந்து ஆதரவு கொடுப்பது துரோகம்
முஸ்லிம் எம்.பிக்கள் அரசோடு செய்துள்ள ஒப்பந்தம் என்ன? பகிரங்கப்படுத்துவார்களா?
20வது திருத்தத்திற்கு ஆதரவு செய்ய முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் சிலர் தயார் நிலையில் இருப்பதென்பது வெளிப்படையான உண்மை. இதில் ஒழித்து மறைக்க ஒன்றுமில்லை. நமது கிராமிய பாஷையில் கூறுவதாயின் “மறைந்து கொண்டு மாப்பிள்ளை கூட்டத்தேவையில்லை”.
ஆனால், அவ்வாறு ஆதரவு செய்வதற்கு முன்னர், முஸ்லிம் சமூகம் சார்பில் அரசாங்கத்திடம் நீங்கள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் என்ன?, அல்லது என்னவென்ன விடயங்களை முன்வைத்து உடன்பாட்டிற்கு வந்திருக்கிறீர்கள்?, அதற்கான எழுத்து மூல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதா?
போன்ற கேள்விகளை யார் கேட்டாலும் அவர்கள் எதிரியாகப் பார்க்கப்படுகிறார்கள்
குறிப்பாக, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தம் அல்லது நீக்கம், மத்ரசாக் கல்வியை மத்திய கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான பிரேரணை, பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை 12.5 வீதமாக உயர்த்தல், மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்ட மாற்றமும் எல்லை நிர்ணயமும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்திருத்தம், பாராளுமன்றத் தேர்தல் முறை மாற்றமும் எல்லை நிர்ணயமும் போன்ற விடயங்களில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்குப் பாதகமான சூழ்நிலைகள் ஏற்படாத வண்ணம் அரசாங்கத்தோடு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டால், அவர்களுக்கு கோபம் வருகிறது.
இவைத்தவிர்ந்து தற்போது தீவிரமடைந்திருக்கும் பிரச்சினைகளான ஒரே நாடு : ஒரே சட்டம், ஜனாஸா எரிப்பு, மாடறுப்புத்தடை , பள்ளிவாயில்களைப் புதிதாக பதியவிடாமல் தடுத்தல், பொத்துவில் முகுது மகா விகாரை நில அபகரிப்பு, இறக்காம மாயக்கல்லி மலை அத்துமீறல், புல்மோட்டை நில ஆக்கிரமிப்பு, கிழக்கு தொல்பொரு;ள் செயலணி, ஒலுவில், நிந்தவூர், மாளிகைக்காடு கடலரிப்பு, விவசாய நிலங்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தல் என இவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில் அரசாங்கத்தோடு என்ன பேசியிருக்கிறீர்கள் எனக்கேட்டால், கேட்பவர் மீது கோபம் கொள்கிறார்கள்.
முஸ்லிம் மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகளிலுள்ள எம்.பிக்களுக்கு வாக்களிக்கும் போது, இவர்கள் எதிர்த்தரப்பில் இருக்கப்போகிறார்கள் என்று தெளிவாக நினைத்துத்தான் தமது ஆணையை இவர்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், அந்த மக்கள் ஆணையை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப்பற்றி இம்மியளவும் கவலையில்லாமல், அமானித்தை மீறுகிறோம் என்பதைப் பற்றி துளியளவேனும் வருத்தமில்லாமல், தமது நிபந்தனையற்ற ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க முற்படுவதை எப்படி அழைப்பது?
திரைமறைவில் அமைச்சுக்களைப் பெறுவதைப்பற்றி மட்டும் உடன்பாடுகள் காணப்பட்டதை எப்படி எடுப்பது?
மேற்கூறப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் முகங்கொடுத்துள்ள, முகங்கொடுக்கவுள்ள எந்தப்பிரச்சினைகளைப் பற்றியும் கவலையில்லாமல், அவை பற்றி இதுவரை எந்தவித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளாமல், வெறும் அமைச்சுக்களுக்காக மட்டும் அள்ளி விழுந்து ஆதரவு செய்ய நினைப்பது எவ்வளவு துரோகத்தனமானது.
இவர்களை மக்கள் வாக்களித்து தெரிந்தெடுத்தது இதற்குத்தானா?
ஏ.எல்.தவம்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
No comments