சுமந்திரனின் தலையில் தேங்காய் உரிப்பது நியாயமல்ல. அவர் கூறிய கருத்துக்களில் என்ன தவறு உள்ளது ?
இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததனை கண்டித்தும், ரவுப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு எதிராக பலர் விமர்சனம் தெரிவிப்பதனை முகநூல்களில் காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் நாங்கள் சுமந்திரன் தரப்பு நியாயங்களையும் சற்று ஆராய வேண்டும். அவ்வாறு அவரது தரப்பு நியாயத்தினை பற்றி சிந்திக்காமல் மேலோட்டமாக சுமந்திரனை மட்டும் விமர்சிப்பது அர்த்தமற்ற விடயமாகும்.
இருபதாவது திருத்தம் பாராளுமன்றத்தில் சம்ர்பிக்கப்படுவதற்கு முன்பே அதற்கு எதிராக ஆளும் தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் வலுவான எதிர்ப்புக்கள் அதிகரித்திருந்தது.
சர்வாதிகாரியின் கையில் இந்த அதிகாரம் சென்றடைவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறி எதிர்த்தரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் இதனை எதிர்ப்பதென்று கூட்டுப்பொறுப்புடன் அனைவரும் முடிவெடுத்திருந்தார்கள்.
இந்த சட்டமூலத்தை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸ் உற்பட பல கட்சிகள் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தது. இது ஏனைய கட்சிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய விடயமாகும்.
பின்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகின்ற இறுதி நேரத்தில் கூட்டுப்பொறுப்புடன் ஒன்றாக செயல்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததனால் சக உறுப்பினர்கள் அதனை விமர்சிப்பதென்பது தவிர்க்க முடியாததொன்றாகும்.
இதேபோன்று தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த அரவிந்தகுமார் வாக்களித்தமைக்காக அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறு மனோகணேசன் நடவடிக்கை எடுக்கின்ற நிலையில் உங்களால் ஏன் முடியாது என்று கேள்வி எழுப்புவதில் என்ன தவறு உள்ளது ? நீங்கள் வாக்குறுதி வளங்கியிருக்காவிட்டால் சுமந்திரன் எம்பி இவ்வாறு உங்களை விமர்சித்திருக்கமாட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் நீண்டகாலமாக ஒன்றாக பயணித்து வருகின்றது. சுமந்திரன் எம்பி அவர்கள் மிகவும் மிதவாத போக்குடையவர்.
கல்முனையில் உடனடியாக தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் முறுகலை தூண்டும் வகையில் ஒரு பௌத்த பிக்குவின் ஏற்பாட்டில் உண்ணாவிரதம் இருந்தபோது சுமந்திரன் போன்றவர்களின் மிதவாத போக்கினாலேயே அன்றைய உண்ணாவிரதம் இலக்கை அடையவில்லை.
அதுமட்டுமல்லாது சஹ்றான் குழுவினரின் குண்டுத்தாக்குதலுக்கு பின்பு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில முஸ்லிம் இளைஜர்கள் மற்றும் மௌலவிமார்களை பணம் அறவிடாமல் வாதாடி அவர்களை விடுதலை செய்வதற்கு சுமந்திரன் எம்பி அவர்கள் உதவிபுரிந்தார் என்பதனை எமது முஸ்லிம் சமூகம் மறந்துவிடக்கூடாது.
எனவே முஸ்லிம் தலைவர்கள் வழங்கிய வாக்குறுதியை நம்பியதனால் இருபதாவது திருத்தம் எப்படியும் தோல்வியடையும் என்று கணக்குப்போட்டிருந்த நிலையில், அது எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதானது சுமந்திரன் போன்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதனாலேயே சுமந்திரன் எம்பி எமது தலைவர்களை விமர்சித்துள்ளார். இது அரசியலில் சாதாரண விடயம். நாங்கள் வாக்குறுதி மீறியதனை மறைப்பதற்காக சுமந்திரன் மீது கவனத்தை திசை திருப்புவது ஆரோக்கியமல்ல.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments