மனிதன் மனசு வச்சா...- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
(தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ஒரு கதை இது. இன்றைய உலகம் படிக்க வேண்டிய விஞ்ஞான உண்மைகள் சில அதிலே இருக்கின்றன. அந்த விஞ்ஞான உண்மைகளை உண்மைப்படுத்துகின்ற அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளை பிற்குறிப்பில் இணைத்திருக்கிறேன்.)
ஒரு நாள் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் ஓர் அறிவாளி; பக்தர்; தியானத்தில் ஈடுபடுபவர். அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
“என்ன சார் உலகம் இது? எங்கே பார்த்தாலும் சண்டை சச்சரவு! கூச்சல் குழப்பம்! வருங்காலத்தில் மனிதன் நிம்மதியா வாழ முடியாது போல இருக்கே!" என்றேன்.
அதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?" என்றார் அவர். தெரியலையே!" என்றேன்.
அவர் சொன்னார். அனைத்துக்கும் காரணம் மனிதன்தான்! மனிதன் மனசு வச்சா இந்த பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும்!" கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு" என்றேன்.
“இது ஏதோ பேச்சுக்காக சொல்ற வார்த்தை இல்லே முழுவதும் உண்மை" என்றார். ஆர்வமாக அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தேன். அவர் சில அறிவியல் உண்மைகளைச் சொன்னார்.
ஒரு சோதனை நடந்ததாம். இரண்டு தோட்டங்களைப் பராமரித்த ஒரு தோட்டக்காரர் நடத்திய சோதனை அது.
ஒரே மாதிரியான இரண்டு தோட்டங்களில் ஒரு தோட்டத்தை அவர் நன்கு கவனித்தாராம். அங்கிருந்த செடி கொடிகளிடன் அன்பாக நடந்து கொண்டாராம்.
மற்றைய தோட்டத்திலுள்ள செடி கொடிகளிடம் ரொம்ப வெறுப்பாகவும் எரிச்சலாகவும் நடந்து கொண்டாராம்.
என்ன ஆயிற்று தெரியுமா? அன்பாகவும் கவனமாகவும் கவனித்து வந்த செடி கொடிகள் விரைவாக வளர்ந்தன வலுவாக இருந்தன. வெறுப்பாகக் கவனித்து வந்த தோட்டம் அந்த அளவுக்கு வளரவில்லை.
பெரியவர் சொன்ன இந்த செய்தி வியப்பாக இருந்தது. அவர் இன்னொரு சோதனை பற்றிய விபரங்களையும் சொன்னார்.
ஒரு தோட்டம். அங்கே ஒரு தோட்டக்காரன் இருந்தான். ஒரு பெரிய கத்தரிக்கோலை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு அதிகமாக வளர்ந்திருக்கின்ற கிளைகளை வெட்டித் தீர்ப்பதுதான் அவனது வேலை.
இந்த தோட்டக்காரன் ஒரு நாள் இன்னொரு தோட்டத்திற்கு போனான், தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக. இவன் அந்தத் தோட்டத்தில் அடியெடுத்து வைத்த உடனேயே என்ன நடந்தது தெரியுமா? அங்கே இருந்த சில நுட்பமான செடிகள் இலைகளை சுருக்கிக் கொள்ள ஆரம்பித்தன. இவன் நம்மை வெட்டுவதற்காக வருகிறான் என்பதை உணர்ந்த மாதிரி" என்றார்.
நான் வியப்போடு அந்த பெரியவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து பேசினார்
தம்பி! நான் சொல்கின்ற செய்திகளை உங்களால் நம்ப முடியாது. அதனால்தான் இப்படி என்னை அதிசயமாகப் பார்க்கிறீர்கள். ஆனாலும், நான் சொல்வதெல்லாம் சோதித்து அறியப்பட்ட உண்மைகள்.
அதாவது, ஒரு மனிதனுடைய எண்ண அலைகள் இன்னுமொரு மனிதனையோ பொருளையோ பாதிக்கலாம் என்பது உண்மை. ஒரு மனிதனுடைய எண்ணம் மற்றும் சொல், செயல் என்பன இந்தப் பிரபஞ்சத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
“எல்லா மனிதர்களும் நல்லவற்றை நினைப்பார்களாயின் பூமியும் அதன் மேற்
பரப்பும் நல்லவற்றால் நிறையும் தீயவை குறையும்" என்றார்.
“சரி நல்லெண்ணம் என்றால் என்ன?" என்று கேட்டேன்.
இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு அவற்றை மீறாமல் அவற்றோடு ஒத்துப் போகின்ற எண்ணம்தான் நல்லெண்ணம். மனிதர்கள் அனைவரதும் வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர் மாதிரி இயற்கையால் உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
அவர் தொடர்ந்து பேசினார்.
“ஒருத்தருடைய மனசுக்கோ உடம்புக்கோ ஒரு பாதிப்பு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது அவருடைய இரத்த சம்பந்தமுள்ள ஏனையோரது உடம்பிலும் மனதிலும் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
இயற்கையின் இந்த விதிப்படிதான் எண்ண அலைகள் அடுத்தவர்களைப் பாதிக்கின்றன.
சில பேர் வாழ்த்தினாலும் திட்டினாலும் அது ஒரு கதிரியக்கச் செயற்பாடு மாதிரி அடுத்தவர்கள் மீது ஓர் அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது.
இன்றைய உலகில் குழப்பங்கள், அழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. அது எதனால் என்று நினைக்கிறீர்கள்?
மனிதர்களின் ஒட்டுமொத்தமான எண்ண அலைகள், மன அழுத்தங்கள் வெளியே விடப்படுகின்றன அல்லவா? அதனால்தான்!
இந்த அண்ட வெளியால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் கெட்ட எண்ணங்களை தாங்க முடியும். அளவுக்கு மீறிப் போனால் நெருக்கடிகள் இயற்கையையும் பாதிக்கும் மனித வாழ்வையும் பாதிக்கும்.
“The atmosphere can bear negative thoughts only to a certain extent and finally bursts into crisis, riots and wars” என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது வெறும் திண்ணைப் பேச்சு அல்ல அது விஞ்ஞானபூர்வமான உண்மை" என்றார்.
இவ்வளவு விவரங்களையும் நான் சந்தித்த அந்தப் பெரியவர் என்னிடம் சொன்னார். இன்னொன்றையும் அவர் சொன்னார்.
இந்த விஞ்ஞான உண்மைகளையெல்லாம் பள்ளிக்கூடங்களில் குறைந்தது மூன்றாவது வகுப்பில் இருந்தாவது குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். போதித்தால் வருங்காலத்தில் நல்ல விதமான எண்ண அலைகள் எமது அண்ட வெளியில் பரவும். அப்புறம் இந்த பூமியே சொர்க்கமயமாகும்."
இது சீரியஸாக சிந்திக்க வேண்டியதொரு கருத்துதான். உலக சமாதானத்திற்காக அணு ஆயுதங்களைக் குறைக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் மாத்திரம் போதாது. எமது அண்ட வெளியை நல்லெண்ணங்களால் நிரப்பும் புதிய ஒப்பந்தங்களிலும் மனித சமூகம் கைச்சாத்திட வேண்டும்.
#ஒரு_சின்ன_கற்பனை
இந்தப் பூமியை சொர்க்கமாக்க வேண்டுமென்று கடவுளே ஒரு தடவை நினைத்தார். உடனே அவர் புறப்பட்டு பூமிக்கு வந்து சேர்ந்தார். மனிதனுக்கு இருக்கிற குறைகளையெல்லாம் தீர்த்து வைத்து விடுவோம் என்றெண்ணினார். முதலில் ஓர் ஆளைப் பார்த்தார். அவன் அழுது கொண்டிருந்தான்.
“ஏம்ப்பா அழறே?" என்றார்.
“ஆயிரம் ரூபாவை தொலைச்சுட்டேன். அதான் அழறேன்" என்றான்.
பரவாயில்லை அதற்காக கவலைப்படாதே! நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன் இதை வச்சுக்கோ" என்று சொல்லி ஆயிரம் ரூபாவைக் கொடுத்தார் கடவுள்.
அதை வாங்கிய அவன் இன்னும் பலமாக சப்தமிட்டு அழ ஆரம்பித்தான்.
“மறுபடியும் ஏனப்பா அழறே" என்றார் கடவுள். நான் தொலைத்த ஆயிரம் ரூபாயும் இருந்தா இப்போ என் கையில் இரண்டாயிரம் இருக்குமே" என்று சொல்லி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
#பிற்குறிப்புகள்
1. எல்லா மனிதர்களும் நல்லவற்றை நினைப்பார்களாயின் புமியும் அதன் மேற்பரப்பும் நல்லவற்றால் நிறையும் தீயவை குறையும்."
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நல்லவற்றை நம்பி, தீயவற்றை அஞ்சி வாழ்வார்கள் ஆயின் அவர்கள் மீது வானங்கள் மற்றும் புமியினது அருட் கடாட்சங்களை நாம் அகலத் திறந்து விடுவோம்." (அல்குர்ஆன் 7: 96)
2. இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு அவற்றை மீறாமல் அவற்றோடு ஒத்துப் போகின்ற எண்ணம்தான் நல்லெண்ணம். மனிதர்கள் அனைவரதும் வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர் மாதிரி இயற்கையால் உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிறது."
மனிதர்களே! உங்களை நாம் ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பின்னர் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (சண்டையிட்டுக் கொள்வதற்காக அல்ல. ஒவ்வொரு சாராரினதும் அடையாளங்களை வெளிப்படுத்தி) பரஸ்பரம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக" (அல்குர்ஆன் 49: 13)
3. இந்த அண்ட வெளியால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் கெட்ட எண்ணங்களை தாங்க முடியும். அளவுக்கு மீறிப் போனால் நெருக்கடிகள் இயற்கையையும் பாதிக்கும் மனித வாழ்வையும் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தரையிலும் கடலிலும் ஒழுங்கீனங்கள், சீர்குலைவுகள் மலிந்து விட்டன. மனிதனது கரங்கள் செய்த தீ(ய) வினைகள் காரணமாக அவன் செய்தவற்றில் சிலதை நாங்கள் அவனுக்கு சுவைக்கக் கொடுத்திருக்கிறோம்" (அல்குர்ஆன் 30: 41)
4. மனிதன் மனசு வச்சா பூமி சொர்க்கமாகலாம்." ஒரு காலம் வரும். அதன்போது பூமியில் வாழும் எந்த இரண்டு மனிதர்களுக்கிடையேயும் தொடர்ச்சியாக ஏழு வருடங்களுக்குப் பகை இருக்காது" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எதிர்பார்க்கின்ற ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது வருகையைத் தொடர்ந்தே இந்த அதிசயம் இடம்பெறும். ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்தான் உலகின் இத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
Alhasanath September 2020
No comments