ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - காதர் மஸ்தான் எம்.பி.
மிகவும் அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் செயற்படும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையினை பிரயோகிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகளைப் பெற வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன். குமணன் ஆகியோர் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது பல்வேறு பட்ட கஷ்டங்கள் சிரமங்களுக்கிடையே அர்ப்பணிப்போடு ஊடக தர்மங்களை பேணி தமது கடமைகளையாற்றும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது .
இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட்டு நாட்டின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு.
No comments