Breaking News

றிஷாட் பதியுதீன் வெளியில் இருந்தால் 20ஆவது திருத்தத்துக்கு பாதகம் ஏற்படும் என அஞ்சியே அவரை சிறையில் அடைத்தனர் : சட்டத்தரணி பீ.எம். ஷிபான்.

நூருல் ஹுதா உமர்

றிஷாட் பதியுதீன் 20 ஆவது திருத்தத்தின் அரங்கேற்றத்தின் போது வெளியில் இருந்தால்  அரசுக்கு ஆபத்து என்பதாலும், 20 அரங்கேற்றத்தை தடுத்துவிடுவாரோ என்ற அச்சத்திலும், பாராளுமன்றத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்களுக்கும் தலைமைத்துவத்திற்குமான தொடர்பை அறுத்து அவசர அவசரமாக சட்டமா அதிபரின் வேண்டுகோளின் பேரில் அவரை கைது செய்யும் முயற்சி இடம்பெற்றது. இருந்தாலும் இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுக்கு நீதித்துறையின் மீது இன்னும் அளவுக்கதிகமான நம்பிக்கை இருக்கின்றது.  நியாயமான முறையில் ரிஷாத் பதியுதீன் அவர்களுடைய விசாரணை நடத்தப்பட்டு விரைவாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென வினயமாக  சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோளினை முன்வைக்கின்றேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம். ஷிபான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அண்மையில் கைதாகி விசாரணையில் இருந்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு நேற்று நீதிமன்றில் பிணை வழங்கப்படாததை அடுத்து நேற்று (28) அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த போது,

அரசாங்கம் கடந்த 21ஆம் திகதி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை 2/3 பெரும்பான்மையுடன்  வெற்றிகரமாக நிறைவேற்றி கொண்டதற்கான காரணம் பல்வேறு தரப்பினராலும், பல்வேறு வகையிலும்,  சமூக ஊடகங்களில் அலசப்பட்டு கொண்டிருக்கின்றன. இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகிய இருவரையும் ஒன்றாகப் பிணைத்து உச்சகட்ட வாக்குவாதங்கள் மற்றும் பல்வேறுபட்ட கருத்துக்கள் பரவலாக உலாவுகின்றன. ஆனால் இவ்விரண்டு தலைவர்களினதும் வகிபாகங்கள் வேறு பிரித்து  அறியப்பட வேண்டியது அவசியமாகும்.

கடந்த 2018 ஒக்டோபர் மாதம் அடாத்தாக அரங்கேற்றப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது மஹிந்த  அரசினால் ஆசைவார்த்தை ஊட்டி அழைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் உறுப்பினரானஎஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களை எந்தவிதமான பங்கமும் இன்றி அரசிடமிருந்து மீட்டெடுத்து கட்சியை பாதுகாத்துக் கொண்டவர் தலைவர்  றிசாட் பதியுதீன். அதன் பின்னர் மகிந்தரின் புரட்சி கவிழ்கப்பட்டதுமே வரலாறு.

ஆகவேதான் ரிஷாட் பதியுதீன் 20 ஆவது திருத்தத்தின் அரங்கேற்றத்தின் போது வெளியில் இருந்தால்  அரசுக்கு ஆபத்து என்பதாலும், 20 அரங்கேற்றத்தை தடுத்துவிடுவாரோ என்ற அச்சத்திலும், பாராளுமன்றத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்களுக்கும் தலைமைத்துவத்திற்குமான தொடர்பை அறுத்து அவசர அவசரமாக சட்டமா அதிபரின் வேண்டுகோளின் பேரில் அவரை கைது செய்யும் முயற்சி இடம்பெற்றது.

மேலும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி  தேர்தலின் போது இடம்பெற்ற சம்பவத்துக்கு அரசாங்கத்திற்கு தேவையான ஒரு நாளில் ரிசாத் பதியுதீனின்  கைது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்துக்கும் ரிஷாத் பதியுதீனுக்கு ம் டீல் இருக்குமாக இருந்தால் கைதாகி நீதிமன்றம் கொண்டுவந்த  பொழுதிலோ அல்லது 27 ஆம் திகதி அதாவது  நேற்றைய தினத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக இந்த நிமிடம் வரை அவர் சிறைப்படுத்தப்பட்டிருப்பதானது அரசாங்கத்துக்கும் அவருக்கும் சுமுகமான உறவு இல்லை என்பதை கட்டுகிறது.

இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுக்கு நீதித்துறையின் மீது இன்னும் அளவுக்கதிகமான நம்பிக்கை இருக்கின்றது.  நியாயமான முறையில் ரிஷாத் பதியுதீன் அவர்களுடைய விசாரணை நடத்தப்பட்டு விரைவாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென வினயமாக வேண்டுகோளினை சம்பந்தப்பட்டவர்களுக்கு  முன்வைக்கின்றேன் என்றார்.




No comments

note