நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச தன்னார்வ அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைதான் 19ஆவது திருத்தச்சட்டமாக நிறைவேற்றினர் : ஏ.எல். எம். அதாவுல்லா
நூருள் ஹுதா உமர்
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னர் நாட்டில் ஸ்திரமான ஆட்சியொன்றை ஸ்தாபிக்கும் முகமாகவே 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எமது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியம். அது மக்களால் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச தன்னார்வ அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைதான் 19ஆவது திருத்தச்சட்டமாக நிறைவேற்றினர்.
இதனை மக்கள் உருவாக்கவில்லை. 19இல் மக்களை ஏமாற்றியதையே இவர்கள் செய்தனர். 1978இல் ஜே.ஆர்.ஜயவர்தன கொண்டுவந்திருந்த அரசிலமைப்பில் அவரே பல திருத்தங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால், 19ஆவது திருத்தச்சட்டம் என்.ஜி.ஓ காரர்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
நிறைவேற்று அதிகார முறை, பிரதமர் ஆட்சி அல்லது எமக்கென்று தனித்துவமான முறைமை இருக்க வேண்டும். அதனை விடுத்து வேறு நபர்களின் தேவைகளுக்கு ஏற்பவே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்திற்காக, சபாநாயகருக்காக அல்லது ஜனாதிபதிக்கா அதிகாரம் உள்ளதென நீதிமன்றில் சென்று தினமும் மன்றாடும் நிலையே 19 இல் காணப்பட்டது.
No comments