Breaking News

மாடறுப்பதனை தடைசெய்வது பற்றி நீதி அமைச்சர் உற்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன கூறுவார்கள் ? எதிர்பார்ப்பு.

பௌத்த நாடான இலங்கையில் மாடறுப்பதனை தடை செய்வது குறித்த யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முன்வைத்துள்ளார்.

அவ்வாறு பிரதமர் முன்வைத்த யோசனையை ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

இவ்வாறு மாடறுப்பினை இலங்கையில் தடைசெய்ய எடுக்கும் முயற்சியானது இது முதல் முறையல்ல. கடந்த 2010 க்கு பிந்திய காலப்பகுதியில் பொதுபலசேனா இயக்கத்தினரால் ஹலால் சம்பந்தமான பிரச்சினைகள் எழுந்தபோது, பௌத்த நாட்டில் மாடுகள் அறுக்கப்படுவதனை தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடாத்தினார்கள்.

இது மஹிந்த ராஜபக்சவின் கொள்கையினை ஒத்ததாக இருந்தாலும், பொதுபலசேனா இயக்கத்தின் ஜானசார தேரர் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததனாலேயே இது அமுலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

2015 தேர்தலில் மகிந்த தரப்பு வெற்றி பெற்றிருந்தால், மாடறுப்பதற்கான தடை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ முஸ்லிம்களை இலக்காகக்கொண்ட பல சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கும்.

இன்று பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனை அமுல்படுத்தப்படுமாக இருந்தால், நீதி அமைச்சர் உற்பட ஆளும் கட்சியில் உள்ள முஸ்லிம் பிரமுகர்களின் கருத்துக்கள் அல்லது நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கும் ?

அதாவது “மாடு அறுக்க வேண்டும் என்றோ அல்லது மாட்டிறைச்சியை கட்டாயம் உண்ண வேண்டும் என்றோ இஸ்லாத்தில் கூறப்படவும் இல்லை. அது பர்ளும் இல்லை. அத்தோடு தொடர்ந்து இறைச்சிக்காக மாடு அறுக்கப்படுவதனால் எமது நாட்டில் மாடுகள் அருகிக்கொண்டு வருகின்றது.

மேலும், கட்டுப்பாடுகளின்றி இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலங்களில் மாடுகளை அருங்காட்சியத்தில்தான் பார்க்க முடியும்.

எனவே மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்தால்தான் உள்நாட்டில் பால்மா உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளிலிருந்து பால்மாக்களை இறக்குமதி செய்வதனை தடுக்க முடியும் “ என்று வாய் கூசாமல் தங்களது எஜமானர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் எங்களது முஸ்லிம் அறிவாளிகள் அறிக்கை வெளியிடுவார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது



No comments

note