ஜே.ஆரும் ஜீ.ஆரும்... சுஐப் எம். காசிம்
இருபதாவது திருத்தம் தமிழ் பேசும் சமூகங்களின் இருப்பை ஆபத்துக்குள்ளாக்குமா? இதுதான் அரசியலில் இன்றைய பேசு பொருள். அரசாங்கம் முழு மூச்சாக “19” ஐ ஒழிக்கப் புறப்பட்டுள்ளதை அவதானிக்கையில், மிகப் பெரிய அரசியல் இலாபத்தை நோக்கிய நகர்வாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எத்தகைய எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது எடுத்த காரியத்தை முடிப்பதிலே அரசாங்கம் மும்முரமாயுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துக்கள் கூட இதில் உள்வாங்கப்படவில்லை. இக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி எதிர்பார்த்த பிரதிப் பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் பதவிகளும் இந்த இருபதில் இல்லை. இந்தப் பதவி இவருக்காகவே இருபதில் உள்வாங்கப்படுமென முன்னர் பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். நாடறிந்த விவகாரமே நட்டாற்றில் விடப்பட்ட சூழலில்தான், இருபதாவது திருத்தம் வரப்போகிறது. வரப்போகிறதென்பதிலும் பார்க்க நிறைவேறப் போகிறதென்பதே பொருத்தமானது.
"19" என்பது ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை தங்களது ராஜயோகத்துக்கு இடப்பட்ட கடிவாளம். இதை ஒடித்து பலருக்குப் பாடம் புகட்டுவது மட்டுமல்ல அரசியல் சட்டங்கள், ஒரு குடும்பத்தைப் பழிவாங்கப் புரட்டப்பட்டதைப் பலருக்குப் புரிய வைக்கவும் வேண்டும். அவ்வளவுதான், இந்தப் புரிதல்களே போதும் இன்னும் பத்து வருடங்களுக்கு தென்னிலங்கையில் இக்குடும்பம் நிலைக்க. இந்தக் கணக்கு, கணிப்பீடுகள்தான், இருபதில் இவர்களை நாட்டம்கொள்ள வைத்துள்ளது. இந்த நாட்டத்தில் நோட்டம் வைத்து எவர் தடுக்க வந்தாலும் விளைவு விபரீதம்தான். இருபதில் இருப்பவைகள் பற்றி அறியும் முன்னரே இருப்பதையும் கெடுக்கும் சில தன்னிச்சையான செயற்பாடுகள், சிலரை எரிச்சலூட்டியும் உள்ளன.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை ஆதரித்து, மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட வழிவகுத்தவர்கள், இன்று இருபதில் இருதலைக்கொள்ளியாக இருப்பது எதற்காக? ஜனநாயகத்தில் உள்ள அக்கறையா? சமூகம் பாதிக்கப்படுமென்ற ஆதங்கமா? இதில், இவர்களது சிறுபான்மைச் சமூகங்கள் மாத்திரம் எவ்வாறு பாதிக்கப்படும்? 'நிறைவேற்று அதிகாரம்' தனிநபர் ஒருவரிடம் குவிவது ஜனநாயகத்துக்கு ஆபத்தென்றால், 2014 இல் 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்திருக்கக் கூடாது. இந்த ஆதரவுதானே நிறைவேற்று அதிகாரத்தை தனிநபரின் ஆதிக்கத்தில் கொண்டுவந்தது. கடந்த காலத்தில் இவ்வதிகாரத்தை ஒழிக்கப்போவதாக் கூறி ஆட்சிக்கு வந்தோர் நடந்துகொண்ட விதங்களில் இவ்வுண்மையைப் புரியலாம். எல்லையின்றிப் பாவிப்பதற்கல்ல நிறைவேற்று அதிகாரம். எடுத்தெறிந்து போவதற்குமல்ல இவ்வதிகாரத்தின் பதவிக்காலத் தவணைகள். இவைகள் உணரப்பட்டிருந்தால் 18 ஆவது திருத்தம் நிறைவேறுவதை சிறுபான்மைத் தலைமைகள் அன்று நிறுத்தியிருக்கும். எல்லாவற்றையும் சந்தர்ப்பவாதமாகப் பார்த்த இவர்கள், எவற்றையும் சமயோசிதமாகப் பார்க்கவில்லையே!
இது மட்டுமல்ல, இரட்டைப் பிரஜாவுரிமைச் சிக்கலை நீக்குவது பற்றியும் இருபது கூறுவதுதான் பெரும் சர்ச்சையாகி வருகிறது. ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவரை அரசாங்கத்தின் அதியுயர் பதவியில் அமர்த்தும் (பிரதமர்) நோக்கமும் இருபதில் இருக்கிறது. ஆனால், புலம்பெயர் டயஸ்பொராக்கள் பாராளுமன்றம் வரவும் இது வழிவகுக்கும் என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி. எதையாவது தூக்கிப்பிடித்து தென்னிலங்கையில் நிலைக்க முயலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு, இருபதும் இரட்டைப் பிரஜாவுரிமை விடயமும் கைக்கு வந்த ராசியாகிவிட்டது. இதனால்தான் புதிய பாராளுமன்றக் கூட்டத் தொடரில், வடக்கின் முன்னாள் முதல்வர் ஆற்றிய உரையை தென்னிலங்கை முதலீடாகப் பாவிப்பதற்கு முயற்சிக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களை தூக்கிப் பிடிக்கும் கடுமையான முயற்சிகள்தான், கடந்த காலத் தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அமையும். நல்லாட்சி காலத்தில் பௌத்த துறவிகள் குறித்து, எவ்வித பொருட்டுமின்றிப் போன போக்குகளே, தென்னிலங்கையிலிருந்து தம்மைத் தூரப்படுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கவலைப்படுகின்றன. இதற்காகத்தான் இந்த எத்தனங்கள். சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டிலிருந்தாலும், சிங்கள மக்களைக் கைவிடவில்லை எனக் காட்டும் இந்த முயற்சிகள், காலப்போக்கில் இத்தலைமைகளையும் கைவிட வைக்கலாம். இவ்வாறு நிகழின், 'இலங்கை பெரும்பான்மையினரின் நாடு' என்ற தோற்றப்பாடுகள் பலமடைவதைத் தவிர்க்க இயலாது.
எதற்கும் அச்சம் தேவையில்லை. பௌத்த மதத்தைப் பேணி, 19 இல் இருந்த ஆணைக் குழுக்களை அவ்வாறே பாதுகாத்து, ஜனநாயகம் பேணப்படுமெனக் கூறும் அரசாங்கம், ராஜபக்ஷக்களைப் பழிவாங்கக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நீக்கியே இருபது வருகிறதென்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 ஆக அதிகரிக்கப்படாதிருந்தால், நாமல் ராஜபக்ஷ இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம். இது மட்டுமா, இரட்டைப் பிரஜாவுரிமை தடுக்கப்படாதிருப்பின், தற்போதைய ஜனாதிபதி அமெரிக்கக் குடியுரிமையை நீக்கியிருக்கத் தேவையில்லை. ஏன், இன்னும் சில காலங்களில் அரசின் முக்கிய பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் ராஜபக்ஷ சகோதரர், இன்று அப்பதவியை அலங்கரித்திருப்பார். காணாமல் போனோர் அலுவலகம், படையினரை டயஸ்பொராவிடம் மண்டியிட வைக்கும் வௌிநாட்டு அரசியல் பொறி. இவற்றையெல்லாம் செய்த “19” இனியும் எதற்கு? இதுதான் அரசின் சிந்தனை.
எனவே, இந்தச் சூழலை எதிர்கொள்ளும் சமயோசிதம் தமிழ் பேசும் மக்களின் காலக் கடமையாகியுள்ளது. 19 இல் அறிமுகமான ஆணைக் குழுக்கள் சிலதையும் இருபதாவது திருத்தம் பாதுகாக்கப்போவது எதற்காக? இந்த ஆணைக் குழுக்களையும் ஜனநாயகத்துக்கான அடித்தளங்களாக புதிய அரசாங்கமும் கருதுகிறதா? எனவே, ஜனநாயக விரும்பிகள் அச்சப்படவும் தேவையில்லை என்ற நிலைப்பாடுகளும் இதிலுள்ளன.
ஆனால், இவ்வாறான புதிய திருத்தங்கள் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பவை, இனப்பிரச்சினையின் அடிநாதமாகப் பார்க்கப்படும் சுவடுகளை இல்லாமலாக்காதிருந்தால் போதும். மாகாண சபைகளை (13 ஆவது திருத்தம்) பிரிவினையின் அடையாளமாகச் சிலரும், அதிகாரப் பகிர்வின் அர்த்தமாகச் சிலரும் நோக்குகையில், அரசுக்கு இது பற்றி என்ன நோக்கம் உள்ளது என்பதுதான் அனைவரதும் ஆவல். உரிமைப் போராட்டம் நடந்ததற்கான சுவடுகளையாவது மையப்படுத்தி, இனப் பிரச்சினையின் தீர்வுகள் முன்னகர்த்தப்படுமா? ஒரு காலத்தில் ஆட்சியாளர்களைப் பணிய வைத்துப் பேரம் பேசிய பலங்கள், சர்வதேசத் தலையீடுகள் இல்லாதுள்ள இன்றைய பேரெழுச்சியில், வெறும் ஆதங்கங்களோடு அரசியல் செய்யும் நிலைக்கு தமிழ் பேசும் சமூகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
No comments